புனே பஸ் நிலையத்தில் பெண்ணை அதிகாலையில் சீரழித்து கொடூரம்
புனே பஸ் நிலையத்தில் பெண்ணை அதிகாலையில் சீரழித்து கொடூரம்
ADDED : பிப் 27, 2025 02:18 AM
புனே: புனே பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில், இளம்பெண் ஒருவரை, பல நாள் குற்றவாளி ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவில், சதாரா மாவட்டத்தின் பால்தான் நகருக்கு செல்ல, 26 வயது இளம்பெண் ஒருவர், புனேவில் ஸ்வராகேட் பஸ் நிலையத்தின் நடைமேடையில் நேற்று முன்தினம் அதிகாலை 5:45 மணிக்கு காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் அப்பெண்ணிடம், 'சகோதரி, நீங்கள் எங்கு செல்ல வேண்டும்?' என, பேச்சு கொடுத்தார்.
முதலில் பேச தயங்கிய அப்பெண், அதன்பின் பால்தான் நகருக்கு செல்லும் பஸ்சிற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்ட அந்நபர், அந்த பஸ், அடுத்த நடைமேடையில் நிற்பதாக கூறி, அப்பெண்ணை அழைத்துச் சென்றார். அங்கு எந்த வெளிச்சமும் இல்லாத பஸ்சை சுட்டிக்காட்டி, அதில் ஏறுமாறு கூறியுள்ளார்.
அதில் ஏற தயங்கிய அப்பெண்ணிடம், பால்தான் செல்லும் பஸ் இதுதான் என மீண்டும் கூறியுள்ளார். இதை நம்பி, அந்த பஸ்சில் இளம்பெண் ஏறினார். இதைத்தொடர்ந்து ஏறிய அந்த மர்ம நபர், அப்பெண்ணை மிரட்டி, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தினார்; பின் தலைமறைவானார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
பஸ் நிலையத்தில் அப்பெண்ணை அழைத்து சென்ற மர்ம நபர், தத்தாத்ரேய ராம்தாஸ் காடே, 36, என்பதை போலீசார் கண்டறிந்தனர்.
காடே மீது, ஏற்கனவே திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. தப்பியோடிய ராம்தாஸ் காடேவை பிடிக்க, தனிப்படைகளை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

