பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட மருத்துவமனை சூறையாடல்!
பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட மருத்துவமனை சூறையாடல்!
ADDED : ஆக 16, 2024 02:02 AM

கோல்கட்டா மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மருத்துவமனைக்குள் நுழைந்த மர்ம கும்பல், கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டது. அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திய அந்த கும்பல், போலீஸ் வாகனத்துக்கும் தீ வைத்தது. இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு முதுநிலை படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர், சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்குக்குள் நடந்த இந்த சம்பவம், நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும், பாதுகாப்பு கேட்டும், நீதி விசாரணை கோரியும் மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பேரணி
இந்த சம்பவத்தைக் கண்டித்து, பெண்கள் பங்கேற்ற, 'நள்ளிரவில் விடுதலையை நோக்கி' என்ற பேரணி, நேற்று முன்தினம் நள்ளிரவில் நடத்தப்பட்டது.
கோல்கட்டாவின் பல பகுதிகள் உட்பட மாநிலம் முழுதும் இந்த பேரணி நடந்தது. கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும், மொபைல் போனில் டார்ச் வெளிச்சத்தை ஒளிரவிட்டும், இவர்கள் பேரணி நடத்தினர்.
இந்த பேரணி நடந்த அதே நேரத்தில், 40 பேர் கொண்ட ஒரு கும்பல், பேரணியில் பங்கேற்பவர்கள் போல் சென்றனர். ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லுாரிக்குள் நுழைந்தனர். போராட்டக்காரர்கள் என்று போலீசார் நினைத்தனர்.
அதற்குள் அந்த கும்பல், மருத்துவமனை வளாகத்தை சூறையாடியது. கையில் கிடைத்த அனைத்து பொருட்களை துாக்கி வீசியும், உடைத்தும் சேதப்படுத்தியது.
மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு போலீஸ் வாகனம் மற்றும் அங்கிருந்த பைக்குகள் உள்ளிட்டவற்றுக்கும் தீ வைத்தனர். இதையடுத்து போலீசார் சுதாரித்து, அவர்களை விரட்ட முயன்றனர்.
அப்போது, அந்த கும்பல், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டது. இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, கும்பலை கலைத்தனர்.
கைது
இதற்குள், மருத்துவமனை வளாகத்துக்குள் அந்த கும்பல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கி, நேற்று அதிகாலை வரை இந்த களேபரம் நடந்தது.
இதையடுத்து மருத்துவமனை வளாகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக, ஒன்பது பேரைக் கைது செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி டாக்டர் கொலை செய்யப்பட்ட கூட்ட அரங்குக்குள், இந்த கும்பல் நுழையவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரும், திரிணமுல் காங்., பொதுச்செயலரும், எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
இதுபோன்ற வன்முறைகளை ஏற்க முடியாது. மக்களின் பிரதிநிதி என்ற அளவில், இந்த சம்பவம் தொடர்பாக, போலீஸ் கமிஷனருடன் பேசினேன்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களை கைது செய்து, இந்த சம்பவத்துக்கு பொறுப்பாக்க வேண்டும் என்று கேட்டுள்ளேன்.
அடுத்த, 24 மணி நேரத்துக்குள் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தப்ப ஏற்பாடு
இதுகுறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளதாவது:
மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதாரங்கள் சிக்கிவிடாமல் இருப்பதற்காக, இந்த கும்பல் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் என்ற பெயரில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டால், யாருக்கும் சந்தேகம் வராது என்று மம்தா பானர்ஜி நினைத்துள்ளார்.
கட்சித் தொண்டர்களை அனுப்பி, வன்முறையை நடத்தியுள்ளார். இந்த உலகிலேயே தான்தான் மிகவும் புத்திசாலி என்று அவர் நினைத்துள்ளார்.
போலீசாரும் நடந்த சம்பவங்களை வேடிக்கை பார்த்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள், தப்பிச் செல்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தை கைவிட்டிருந்த உள்ளூறை டாக்டர்கள் கூட்டமைப்பு, நேற்று முதல் மீண்டும் போராட்டத்தை துவக்கியது.