பெண்ணுக்கு பாலியல் தொல்லை பாதிரியார் மீது பாய்ந்தது வழக்கு
பெண்ணுக்கு பாலியல் தொல்லை பாதிரியார் மீது பாய்ந்தது வழக்கு
ADDED : மார் 08, 2025 01:23 AM

ஜலந்தர்: பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள குளோரி அண்டு விஸ்டம் சர்ச்சின் பாதிரியாராக இருப்பவர், பஜிந்தர் சிங்.
இவரை, இன்ஸ்டாகிராம், யு டியூப் போன்ற சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், பஜிந்தர் சிங் மீது, ஜலந்தர் போலீசில் பெண் ஒருவர் அளித்த புகார்:
பாதிரியார் பஜிந்தர் சிங் தலைமையிலான சர்ச்சில், 2017ல் சேர்ந்தேன்; 2023ல் வெளியேறினேன். 2022ல், ஞாயிற்றுக்கிழமைகளில், சர்ச்சில் உள்ள அறையில் தனியாக அமர வைத்து, என்னை பஜிந்தர் சிங் கட்டிப் பிடித்தார்.
மேலும், என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். நான் கல்லுாரிக்கு செல்லும் போதெல்லாம், பஜிந்தர் சிங்கின் ஆட்கள் என்னை பின்தொடர்ந்து மிரட்டல் விடுத்தனர். என்னை அவர்கள் மன ரீதியாக சித்ரவதை செய்தனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்படி, பஜிந்தர் சிங் மீது பாலியல் துன்புறுத்தல், சித்ரவதை, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை, அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.