ADDED : ஆக 01, 2024 12:31 AM
பெங்களூரு : கணவர் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டதால், மாநில அரசின் சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்த பெண்ணுக்கு வேலை பறிபோனது. 'ஆம்புட்ஸ்மேன்' அமைப்பின் உதவியால் தற்போது மீண்டும் வேலை கிடைத்துள்ளது.
பெங்களூரை சேர்ந்தவர் 35 வயது பெண். கர்நாடக அரசின் சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தார். இவரை தனியார் நிறுவனம் வேலைக்கு அமர்த்தியது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெண்ணின் கணவர் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டார். இதுகுறித்து அப்பெண், தன்னுடன் வேலை செய்யும் சிலரிடம் கூறியுள்ளார்.
இதுபற்றி அறிந்த தனியார் நிறுவனம், அந்த பெண்ணை வேலையில் இருந்து நீக்கியது.
பலமுறை நிறுவனத்திற்கு சென்று பெண் வேலை கேட்ட போதிலும், அவரை மீண்டும் பணியில் அமர்ந்த மறுத்து விட்டனர். இதையடுத்து, அரசு அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களின் குறைகளை விசாரிக்கும், 'ஆம்புட்ஸ்மேன்' அமைப்பில் பெண், தனியார் நிறுவனம் மீது புகார் செய்தார்.
அந்த புகாரை விசாரித்த ஆம்புட்ஸ்மேன் அமைப்பு, பெண்ணுக்கு மீண்டும் வேலை வழங்க கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதையடுத்து, அந்த பெண் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.