UPDATED : மே 28, 2024 10:34 PM
ADDED : மே 28, 2024 10:28 PM

புதுடில்லி : டில்லியில் பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தேடப்பட்ட 22 வயதான பெண் தாதாவை, போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கைலி தன்வார், 22. இவர், லோனி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.
இவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு 25,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் கைலி தன்வார், டில்லி பதேபூர் அருகே மண்டி என்ற கிராமத்தில் தலைமறைவாக உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, அங்கு சென்ற தனிப்படையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைலி தன்வாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தீபக் அக்ரோலா, கரம்வீர் காலா ஆகிய ரவுடி கும்பல் அடங்கிய குழுவில் தானும் இருந்ததாக ஒப்புக் கொண்டார்.
மேலும், இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது அக்கொலையை செய்ததாக கைலி தன்வார் ஒப்புக்கொண்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் அவரை, போலீசார் சிறையில் அடைத்தனர். முன்னதாக, இதே கொலை வழக்கில் முகமது பைஜன் என்பவரை கடந்த 3ம் தேதி கைது செய்தனர்.