ADDED : ஜூன் 29, 2024 11:00 PM

ஆணோ அல்லது பெண்ணோ, தடைகளை தகர்த்தெறிந்து தங்கள் மனதில் விடா முயற்சி, தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம், எந்த உயரத்துக்கும் செல்லலாம் என்பதை, பலர் நிரூபித்துள்ளனர். இவர்களில் பூர்ணிமாவும் ஒருவராவார்.
ராம்நகரை சேர்ந்தவர் பூர்ணிமா, 27. இவருக்கு திருமணமாகும்போது, 16 வயது தான். திருமணமான ஒரு மாதத்துக்கு பின், பூர்ணிமாவின் வாழ்க்கை நரகமானது. இவரது கணவர் மாரப்பா, திருமணத்துக்காக செங்கல் தொழிற்சாலை உரிமையாளரிடம் 20,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.
கொத்தடிமைகள்
இந்த கடனை அடைக்க, தினமும் அதிகாலை 5:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக உழைக்க வேண்டி வந்தது.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பூர்ணிமா, மாரப்பா உட்பட ஒன்பது ஆண்கள், ஐந்து பெண்கள் கொத்தடிமைகளாக பணியாற்றியபடி, செங்கல் சூளை அருகில் உள்ள ஷெட்டில் வசித்தனர். நாள் முழுதும் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டாலும், பணி நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது என, செங்கல் சூளை உரிமையாளர் கட்டுப்பாடு விதித்தார்.
தகவலறிந்த மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களை 2014ல் மீட்டனர். விடுவிக்கப்பட்டது குறித்து, சான்றிதழும் அளிக்கப்பட்டது. மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு கிடைத்தது.
இவர்களுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பூர்ணிமா தையற்கலை பயிற்சி பெற்றுக் கொண்டார்.
லேப்டாப், தங்கநகை கவர்கள், குஷன் கவர், டூர் பேக் உட்பட பல்வேறு பொருட்களுக்கு கவர் தைப்பது குறித்து, பயிற்சி பெற்றார். இதனால் தற்போது இவரது வாழ்க்கை மாறியுள்ளது. தான் கற்ற கலையை வைத்து, தன்னை போன்று கொத்தடிமைகளாக இருந்து, மீட்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்பினார்.
பயிற்சி மையம்
ராம்நகரில் பயிற்சி மையம் ஒன்றை திறந்தார். இங்கு பலருக்கும் தொழிற்பயிற்சி அளிக்கிறார். பலருக்கு வேலை கொடுத்து, அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றினார். இவருக்கு கணவர் மாரப்பா உதவியாக இருக்கிறார். தற்போது தம்பதிக்கு, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
பூர்ணிமா கூறியதாவது:
என் கணவர் வாங்கிய கடனை அடைக்க, என்னையும் செங்கல் சூளையில் கொத்தடிமையாக வைத்து கொண்டனர். எங்களை மோசமாக நடத்தினர்; மனம் போனபடி திட்டினர். பணி நேரம் முடிந்த பின்னும், வேலை வாங்கினர். 1,000 செங்கல் துண்டுகள் தயாரித்தால், 300 ரூபாய் கொடுப்பதாக கூறி ஏமாற்றினர். செங்கல் தயாரிக்கும் இடத்தில், பெண்களுக்கு சரியான வசதிகள் கிடையாது.
இயற்கை உந்துதலை கழிக்க, திறந்தவெளியை பயன்படுத்தினோம். பெண்கள் வீட்டு விலக்காகும்போது, சானிடரி பேடும் கிடைக்காது. ரத்தத்தால் நனைந்த துணியை மாற்றவும், எங்களை அனுமதிக்கவில்லை. பணி முடியும் வரை, அங்கேயே இருக்க வேண்டும்.
குழந்தைகள்
செங்கல் சரியான வடிவத்தில் வராவிட்டால், எங்களை வாய்க்கு வந்தபடி திட்டுவர். இந்த கஷ்டங்களுக்கு இடையிலும், நான் கர்ப்பமடைந்து இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றேன். கொத்தடிமை தனத்தில் இருந்து, நாங்கள் மீட்கப்பட்டபோது, என் மூத்த மகனுக்கு ஒன்றரை வயது, இளைய மகன் ஆறு மாதம் கைக்குழந்தையாக இருந்தான்.
கொத்தடிமையாக இருந்த என் அண்ணிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. கருவிலேயே இருந்த சிசுவை வெளியே எடுத்து, சிகிச்சை பெற விடவில்லை. ஒரு வாரம் வரை அவதிப்பட்டார்.
எங்களை போன்று கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க, பயிற்சி மையம் திறந்துள்ளேன். பலருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -