ADDED : மே 03, 2024 06:47 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தலில் முதற்கட்ட ஓட்டுப்பதிவில் பெண்களின் 'கை' ஓங்கியுள்ளது.
கர்நாடகாவில் 2014 லோக்சபா தேர்தலில், ஓட்டுப்பதிவு செய்ததில், ஆண் வாக்காளர்களின் எண்ணிகை அதிகம் இருந்தது. இம்முறை 14 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்ரல் 26ல் நடந்த ஓட்டுப்பதிவிலும் பெண்களின் கை ஓங்கியுள்ளது. ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில், ஓட்டு போட்டதாக தேர்தல் ஆணையத்தின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.
ஆண் வாக்காளர்களின் ஓட்டுப்பதிவு 69.48 சதவீதமும்; பெண்களின் ஓட்டுப்பதிவு சதவீதம் 69.65 சதவீதமாகவும் உள்ளது. பெங்களூரு வடக்கு, சென்ட்ரல், தெற்கு, ரூரல், தட்சிண கன்னடாவில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் ஓட்டு போட்டுள்ளனர்.
பெண்களிடம் படிப்பறிவு அதிகரித்தது, விழிப்புணர்வு ஏற்பட்டது என பல்வேறு காரணங்களால் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
ஓட்டுப்பதிவு குறித்து, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டங்களில், ஆண்களை விட, பெண்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர்.
ஓட்டுப்பதிவின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வதில், ஆர்வம் காண்பிக்கின்றனர். முதற்கட்ட ஓட்டுப்பதிவில், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தது. இரண்டாம் கட்டத்திலும், பெண்களின் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க, நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கூறினார்.
'ஐ புரோ' திருத்தம் இலவசம்
விஜயநகராவில் ராகவேந்திரா மடம் அருகில் லதா என்பவர் பெண்கள் அழகு நிலையம் வைத்துள்ளார்.
இரண்டாம் கட்டமாக வரும் 7ம் தேதி, விஜயநகரா உட்பட 14 தொதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதில் பெண்கள் கட்டாயம் ஓட்டு போட வேண்டும் என்பதற்காக, லதா புதிய சலுகையை அறிவித்துள்ளார். இதன்படி, 'மே 7ம் தேதி பெண்கள் ஓட்டு போட்டதற்கான அடையாள மை காண்பித்தால், அவர்களுக்கு இலவசமாக 'ஐ புரோ' திருத்தம் செய்யப்படும். அன்று காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை எத்தனை பேர் வந்தாலும் இலவசமாக 'ஐ புரோ' திருத்தம் செய்யப்படும்' என குறிப்பிட்டு உள்ளார்.
இவர் ஏற்கனவே எட்டு ஆண்டுகளுக்கு முன், பெண்களுக்கான தையல் கடை வைத்திருந்தார். ஒவ்வொரு ஆண்டும் சகோதரத்துவத்தை விளக்கும் வகையில் இலவசமாக ராக்கியை வினியோகித்து வந்துள்ளார்.