ADDED : ஆக 25, 2024 09:53 PM
ஷிவமொகா:
மூங்கில் தோப்பில் தனியாக வேலை செய்த போது, யானை தாக்கி, தொழிலாளி இறந்தார்.
கதக் லட்சுமேஸ்வராவை சேர்ந்தவர் ஹனுமந்தப்பா, 50. மனைவி, நான்கு பிள்ளைகளுடன ஷிவமொகா அருகே ஆலதேவரஒசூர் கிராமத்தில் உள்ள, சம்பத்குமார் என்பவரின் பண்ணை வீட்டில் வசித்தார்.
அஷ்பக் அகமது கான் என்பவருக்கு சொந்தமான, மூங்கில் தோப்பில் தொழிலாளியாக வேலை செய்தார். இந்த மூங்கில் தோப்பு வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது.
நேற்று முன்தினம் இரவு மூங்கில் தோப்பில், ஹனுமந்தப்பா மட்டும் தனியாக வேலை செய்தார். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, காட்டு யானை மூங்கில் தோப்பில் நுழைந்தது.
யானையை பார்த்ததும் அவர் ஓட்டம் பிடித்தார். ஆனால் அவரை யானை விரட்டி சென்று, தும்பிக்கையால் பிடித்து துாக்கி வீசியது. பின், காலால் மிதித்து கொன்றது.
நேற்று காலை வரை ஹனுமந்தப்பா வீட்டிற்கு வராததால், அவரது மனைவி தோப்பிற்கு சென்று பார்த்தார். கணவர் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதார்.
தகவல் அறிந்த வனத்துறையினர் வந்தனர். அரசிடம் பேசி ஹனுமந்தப்பா குடும்பத்திற்கு, உரிய நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்தனர்.

