ADDED : மே 22, 2024 06:44 AM

தங்கவயல் : 'பெமல் தொழிற்சாலையின் 60ம் ஆண்டு விழாவில் தொழிலாளர்களுக்கு வழங்கிய நினைவு பரிசை ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்' என்று 'பேட்ஜ்' அணிந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பெமல் தொழிற்சாலையின் மணி விழா கடந்த 11ம் தேதி மைசூரில் நடந்தது. தங்கவயல், பெங்களூரில் எளிமையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை ஒட்டி, பெமல் தொழிலாளர்களுக்கு தலா 8 கிராமில் தங்க நாணயம் வழங்கப்பட்டது.
ஆனால், அங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. தங்களுக்கும் தங்க நாணயம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த 11ம் தேதி பெமல் உணவகத்தில் வழங்கும் உணவை சாப்பிடாமல் புறக்கணித்தனர்.
நேற்று, பெமல் நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க, 'கோரிக்கை அட்டை' அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வாரத்தில் நிர்வாகம், தன் நிலைப்பாட்டை தெரிவிக்கா விட்டால், அடுத்தகட்ட போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.
பெமல் தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள், தங்களுக்கும் 'மணி விழா தங்க நாணயம்' வழங்க வேண்டும் என்று, அடையாள அட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இடம்: தங்கவயல்.

