இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் அவசியம் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் வலியுறுத்தல்
இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் அவசியம் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் வலியுறுத்தல்
ADDED : ஆக 02, 2026 08:43 PM
புதுடில்லி: “இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், அதேபோன்ற சட்டம் நம் அண்டை நாடுகளான வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிலும் அவசியம்,” என, வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின், கொலை மிரட்டல் காரணமாக அந்நாட்டில் இருந்து தப்பி மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் வசித்தார்.
அதன் பின் 2007ல் அவரது நாவலுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளைத் தொடர்ந்து கொல்கட்டாவை விட்டு வெளியேறினார். வெளிநாடுகளிலும், தற்போது டில்லியிலும் வசித்து வரும் தஸ்லிமா, 19 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முன்தினம் மீண்டும் கொல்கட்டா வந்தார்.
அவருக்கு, மேற்கு வங்க அரசு சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
உலகின் முன்னேறிய நாடுகள் அனைத்திலும், பொது சிவில் சட்டத்தை போன்ற சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். அனைவருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டும்.
பெண்கள் பல்வேறு வகையான பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால், அவற்றில் பெரும்பாலானவற்றை நீக்க முடியும். வங்கதேசத்தில், ஹிந்து பெண்களுக்கு தந்தையின் சொத்தில் சம உரிமை இல்லை. அவர்களுக்கு சம உரிமையும், சுதந்திரமும் கிடைக்க வேண்டுமெனில், பொது சிவில் சட்டம் அவசியம்.
வங்கதேசத்தின் அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட விதம் தவறானது. அது ஜனநாயகத்திற்கு எதிரானது. அவரது கட்சிக்கு தடை விதிக்கப்பட்டதும் முற்றிலும் ஜனநாயக விரோதமான நடவடிக்கை. அவாமி லீக் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டும். ஷேக் ஹசீனா மீண்டும் வங்கதேசம் திரும்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
