யஷ்வந்த்பூர் - ஓசூர் 'மெமு' ரயில் விரைவில் துவக்கம்: சோமண்ணா
யஷ்வந்த்பூர் - ஓசூர் 'மெமு' ரயில் விரைவில் துவக்கம்: சோமண்ணா
ADDED : செப் 03, 2024 11:27 PM
ராய்ச்சூர்: ''பயணியரின் வேண்டுகோளை ஏற்று, யஷ்வந்த்பூர் - ஓசூர் இடையே மெமு ரயில் சேவைக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது,'' என, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
ராய்ச்சூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
துமகூரில் இருந்து பெங்களூருக்கும், பெங்களூரில் இருந்து துமகூருக்கும் பயணியர் ரயில் இயக்க வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்றுக் கொண்ட ரயில்வே அமைச்சகம், பயணியர், 'மெமு' ரயில் இயக்க ஒப்புதல் அளித்துள்ளது.
துமகூரு
இதன்படி இன்னும் சில நாட்களில் ரயில் எண் 06201 (66561) துமகூரு - யஷ்வந்த்பூர் 'மெமு' ரயில், துமகூரில் இருந்து காலை 8:55 மணிக்கு புறப்பட்டு, 10:25 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும்.
மறுமார்க்கத்தில் ரயில் எண் 06202: யஷ்வந்த்பூர் - துமகூரு 'மெமு' ரயில், யஷ்வந்த்பூரில் இருந்து தினமும் மாலை 5:40 மணிக்கு புறப்பட்டு, இரவு 7:05 மணிக்கு துமகூரு சென்றடையும். இந்த ரயில்கள் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர, ஆறு நாட்கள் இயக்கப்படும்.
ரயில் எண் 06205: பானஸ்வாடி - துமகூரு 'மெமு' ரயில், பானஸ்வாடியில் இருந்து திங்கிட்கிழமை தோறும் மாலை 6:15 மணிக்கு புறப்பட்டு, 8:35 மணிக்கு துமகூரு சென்றடையும்.
மறுமார்க்கத்தில், எண் 06206: துமகூரு - பானஸ்வாடி 'மெமு' ரயில், துமகூரில் இருந்து இரவு 7:40 மணிக்கு புறப்பட்டு 10:05 மணிக்கு பானஸ்வாடி வந்தடையும்.
ஓசூர்
ரயில் எண் 06203: யஷ்வந்த்பூர் - ஓசூர் 'மெமு' ரயில், யஷ்வந்த்பூரில் இருந்து காலை 10:45 மணிக்கு புறப்பட்டு, ஓசூருக்கு மதியம் 12:30 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில், ரயில் எண் 06204: ஓசூர் - யஷ்வந்த்பூர் 'மெமு' ரயில், ஓசூரில் இருந்து மாலை 3:20 மணிக்கு புறப்பட்டு, 5:15 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும்.
இந்த ரயில், ஹெப்பால், பானஸ்வாடி, பெல்லந்துார் சாலை, கார்மேலரம், ஹுலிகே, ஆனேக்கல் சாலை ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும். இன்னும் சில நாட்களில் இந்த ரயில் சேவை துவங்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.