பீதர் தொகுதியில் பா.ஜ.,வுக்கு நெருக்கடி மடாதிபதிகளுடன் எடியூரப்பா ஆலோசனை
பீதர் தொகுதியில் பா.ஜ.,வுக்கு நெருக்கடி மடாதிபதிகளுடன் எடியூரப்பா ஆலோசனை
ADDED : ஏப் 25, 2024 11:26 PM

பீதர்: பீதர் லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளரின் வெற்றிக்காக முயற்சிக்கும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, லிங்காயத் சமுதாய மடாதிபதிகளுடன், நேற்று திடீரென ஆலோசனை நடத்தினார்.
சட்டசபை, லோக்சபா தேர்தல் எந்த தேர்தலாக இருந்தாலும், வேட்பாளர்களின் வெற்றியில், மடாதிபதிகளின் பேச்சு முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களின் பேச்சை மக்கள் மறுப்பது இல்லை. இதே காரணத்தால், கட்சி வேறுபாடின்றி அரசியல் தலைவர்கள், மடாதிபதிகளின் கால்களில் விழுகின்றனர்.
நாத்திகம் பேசுவோரும் கூட, மடாதிபதிகள் விஷயத்தில் புறம்பாக பேசுவது இல்லை. பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகள் பிரியங்கா, சிக்கோடி லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் நாத்திகவாதி. மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பார். ஆனால் மகளின் வெற்றிக்காக கோவில்கள், மடங்களுக்கு செல்கிறார்.
பீதர் தொகுதியில் இரண்டாம் கட்டத்தில், ஓட்டு பதிவு நடக்கிறது. பா.ஜ., சார்பில் பகவந்த் கூபா, காங்கிரஸ் சார்பில் அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே மகன் சாகர் போட்டியிடுகிறார்.
அமைச்சரின் மகன் போட்டியிடுவதால், வெற்றி கடினம் என்பதை உணர்ந்துள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பீதர் மாவட்டத்தின் லிங்காயத் மடாதிபதிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார். பா.ஜ., வேட்பாளர் பகவந்த் கூபாவுக்கு ஆதரவளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
மடாதிபதிகள் மற்றும் மடங்களுடன், எடியூரப்பா நல்லுறவு வைத்துள்ளார். இவர் முதல்வராக இருந்த போது, தாராளமாக நிதியுதவி வழங்கினார். இவரது பேச்சை மடாதிபதிகள் புறக்கணிக்க வாய்ப்பில்லை. பா.ஜ., வேட்பாளருக்கு மடாதிபதிகள் ஆதரவளித்தாலும், ஆச்சரியப்பட முடியாது.

