11 மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலெர்ட்' ஹாசனில் கொட்டி தீர்த்த கனமழை
11 மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலெர்ட்' ஹாசனில் கொட்டி தீர்த்த கனமழை
ADDED : மே 25, 2024 01:38 AM

ஹாசன், ஹாசனில் நேற்று மாலை இரண்டு மணி நேரம் தொடர்ந்து, கனமழை கொட்டித் தீர்த்தது. உடுப்பியில் மின்னல் தாக்கி கல்லுாரி மாணவர் இறந்தார். பாகல்கோட்டையில் வீடுகளின் கூரைகள் பறந்தன.
வங்ககடலில் ஏற்பட்டு உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், கர்நாடகாவில் கடந்த இரண்டு தினங்களாக, கனமழை பெய்து வருகிறது. ஹாசன், தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களுக்கு, கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது.
நேற்று மாலை ஹாசன் டவுனில், தொடர்ந்து இரண்டு மணி நேரம், கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தை சுற்றி மழைநீர் தேங்கியது.
* துண்டிப்பு
பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஹவுசிங்போர்டு காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் இருளில் மூழ்கின. ஹவுசிங் போர்டு காலனியில், மரம் விழுந்ததில் கார் சேதம் அடைந்தது. காருக்குள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் இல்லை.
உடுப்பி மாவட்டத்தின் குந்தாபூர், பைந்துார், காபு, சிர்வா உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலையில் இருந்தே, கனமழை பெய்தது. சிர்வா மணிபெட்டு கிராமத்தில், மின்னல் தாக்கி கல்லுாரி மாணவர் ரக் ஷித், 20, என்பவர் இறந்தார். உடுப்பி கலவாடி கிராமத்தில் ஈஸ்வரா கோவில் வளாகத்தை, மழைநீர் சூழ்ந்தது. இதனால் கோவிலுக்கு செல்ல முடியாமல், பக்தர்கள் அவதி அடைந்தனர்.
* தோட்டங்கள்
பாகல்கோட்டின் கெரலமட்டி கிராமத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு, வீட்டின் கூரைகள் பறந்தன. விளைநிலங்களுக்குள் மழைநீர் சூழ்ந்து, பயிர்கள் சேதம் அடைந்தன.
கெரலமட்டி, இக்கலமட்டி, பெவினமட்டி, பைரமட்டி, அங்கரகி, அச்சனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில், கரும்புத் தோட்டங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால், 50 ஏக்கரில் கரும்புகள் சேதம் அடைந்தன. இதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடித்தனர். தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று கோரி உள்ளனர்.
குடகின் சம்பாஜேயில் இருந்து, கேரளா வயநாடு செல்லும் சாலையில், நிறைய இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்தன. கிராம பஞ்சாயத்து ஊழியர்கள், மரங்களை வெட்டி அகற்றினர். சிக்கபல்லாப்பூர் அருகே 150 ஆண்டு பழமையான, மரம் வேரோடு சாய்ந்தது.
பெங்களூரில் தாசரஹள்ளி, பீன்யா, கோனனகுண்டே பகுதிகளில் மட்டும், நேற்று மாலை மிதமான மழை பெய்தது. தொழிற்சாலைகளில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள், மழையில் நனைந்தபடி சென்றனர். மழை எதிரொலியாக ஷிவமொகா, துமகூரு, சாம்ராஜ்நகர், யாத்கிர் உட்பட 11 மாவட்டங்களுக்கு, இன்று மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

