ADDED : மே 13, 2024 06:23 AM

பெங்களூரு: கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெப்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளுக்கு, 15ம் தேதி வரை, 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மக்கள் நிம்மதி அடைந்தாலும், சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. இதனால் இரவு முழுதும் துாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
கர்நாடகாவில் வரும் 15ம் தேதி வரை பெங்களூரு உட்பட வடக்கு, தெற்கு மற்றும் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, இம்மாவட்டங்களுக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டு உள்ளது.
சிக்கமகளூரின் கடூர், தரிகெரே, அஜ்ஜம்பூர் நேற்று கன மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், தென்னை, நிலக்கடலை விளைவித்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
என்.ஆர்.,புராவின் கட்டினமனே கிராமத்தை சேர்ந்த சவிதா, 48, என்பவர் விவசாய பணி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பெய்த மழை, காற்றால், வேருடன் சாய்ந்த மரம், அவர் மீது விழுந்ததில் உயிரிழந்தார்.
அத்துடன், கார் மீது மரம் விழுந்ததில், அதில் பயணித்த மூவர் படுகாயம் அடைந்தனர். மூவரும் பாலேஹொன்னுார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மைசூரில் கோடையால் பாதிக்கப்பட்ட வன விலங்குகள், தற்போது பெய்து வரும் மழையால் மகிழ்ச்சி அடைந்து உள்ளன. நாகரஹொளே சரணாலயம், கபினி அணைக்கு பின்புறம் யானைகள், புலிகள், மான்கள் உட்பட அனைத்து விலங்குகளும் வருகை தருகின்றன.
தார்வாடில் பெய்த கனமழையால், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் மேடையில் வைக்கப்பட்டிருந்த மரக்கட்டை அவ்வழியாக வந்த தனியார் பஸ் மீது விழுந்ததால், பஸ் சேதமடைந்தது.
அத்துடன், பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்தன, சாலைகளில் வெள்ளம் போன்று மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
ஹூப்பள்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனை பின்புறம் உள்ள வர்த்தக காம்ப்ளக்சின் மதில்சுவர் இடிந்து விழுந்தது. இதனால், கீழ் தளத்தில் மழைநீர் புகுந்ததால், 40க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
சாம்ராஜ் நகரில் மொத்தம் 300 ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை தோப்பு நாசமானது. இதில், உத்துவள்ளி கிராமத்தில் மட்டும் ஏழு ஏக்கரில் விளைந்திருந்த வாழை தோப்பு நாசமானது.
பெலகாவியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. சில சாலைகளில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திடீரென பெய்த மழையால், குடை கொண்டு செல்லாத மக்கள், தங்குமிடம் தேடி அலைந்தனர்.
முனவள்ளியில் காற்றுடன் பெய்த மழையில், 25 மரங்கள் விழுந்தததால், 19 மின்கம்பங்கள் சேதமடைந்தன. பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது.
13_DMR_0009
வீட்டின் முன் பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பெண். இடம்: தேவனஹள்ளி, பெங்களூரு.
*
13_DMR_0010
ஹனுமந்தனஹள்ளி கிராமத்தில் மின் தாக்கியதில், ஜெயண்ணா என்பவருக்கு சொந்தமான 20 ஆடுகள் உயிரிழந்தன. இடம்: சிக்கநாயகனஹள்ளி, துமகூரு.
*
13_DMR_0011
திடீரென பெய்த மழையால் ஒரு குடைக்குள் இருவர் தஞ்சம் புகுந்தனர். இடம்: பெலகாவி.
*
13_DMR_0012
பஸ் நிலைய நிழற்கூடத்திற்குள் குவிந்த பயணியர். இடம்: பைலஹொங்கல், பெலகாவி.
*
13_DMR_0013
பி.ஆர்.டி.எஸ்., வழித்தடத்தில் சாலையில் தேங்கிய மழைநீரில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். இடம்: வித்யா நகர், ஹூப்பள்ளி.
13_DMR_0014பெங்களூரு ஜே.சி., சாலையில் நேற்று மாலை திடீரென சாய்ந்த மரம்.
-------------