ADDED : மே 18, 2024 02:08 AM
பெங்களூரு: மலையோர மாவட்டங்கள், கடலோர மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்ய உள்ளதால், வானிலை ஆய்வு மையம் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
கர்நாடகாவில் மேலடுக்கு சூழற்சி காரணமாக மேகமூட்டமான வானிலை நிலவுகிறது. இதனால் மலையோரம், கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
வட மாவட்டங்கள், கல்யாண கர்நாடகா பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். தெற்கு மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும்.
குறிப்பாக பெங்களூரு நகரம், பெங்களூரு புறநகர், சாம்ராஜ் நகர், சிக்கபல்லாபூர், குடகு, மைசூரு, ஹாசன், துமகூரு, சித்ரதுர்கா, மாண்டியா, ராம்நகர், தாவணகெரே, உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி, பல்லாரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வரும் 21ம் தேதி வரை குடகு, சிக்கமகளூரு, ஷிவமொகா மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை சிவாஜி நகர், விதான் சவுதா, கே.ஆர்.மார்க்கெட், மெஜஸ்டிக், பசவனகுடி, ஜெயநகர், பனசங்கரி உட்பட பல பகுதிகளில் மழை பெய்துள்ளது.
75 நாட்கள்
வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், ஏரிகள், குளங்கள் வறண்டன. அணைகளில் நீர் வரத்து குறைந்தது. குடகு மாவட்டம் தலக்காவிரியில் இருந்து குஷால் நகர் வரையான காவிரி ஆற்றில் தண்ணீர் வறண்டு காணப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் மழை நீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
