வெளிநாட்டு வாழ் இந்திய பெண்ணை பலாத்காரம் செய்த யோகா குரு கைது
வெளிநாட்டு வாழ் இந்திய பெண்ணை பலாத்காரம் செய்த யோகா குரு கைது
ADDED : செப் 05, 2024 05:10 AM

சிக்கமகளூரு, : வெளிநாட்டு வாழ் இந்திய பெண்ணை, பலாத்காரம் செய்த யோகா குரு கைது செய்யப்பட்டார்.
சிக்கமகளூரு அருகே மல்லேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் உல்லால், 53. 'கேவாலா' என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தினார்.
இந்த அறக்கட்டளையின் மூலம் பலருக்கு, யோகா பயிற்சியும் அளித்தார். இதனால் அவர் 'யோகா குரு' என்றும் அழைக்கப்பட்டார். பிரதீப் உல்லாலுக்கு வெளிநாடுகளிலும் ஏராளமான சீடர்கள் உள்ளனர்.
இந்நிலையில் பஞ்சாபை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு வசிக்கிறார். அந்த பெண்ணுக்கு தன் நண்பர்கள் மூலம், பிரதீப் உல்லால் அறிமுகம் கிடைத்தது. ஆன்லைன் மூலம் யோகா வகுப்பிற்கு சேர்ந்தார்.
கடந்த 2022ல் பிரதீப் அழைத்ததன் படி, அந்த பெண் சிக்கமகளூரு வந்து தங்கி, யோகா கற்று வந்தார்.
'முந்தைய பிறவியில் நாம் இருவரும் காதலர்களாக இருந்தோம். இந்த பிறவியில் உங்களை திருமணம் செய்ய நினைக்கிறேன்' என்று பெண்ணிடம் வசியமாக, பிரதீப் பேசி உள்ளார்.
அவரது பேச்சை, பெண்ணும் நம்பினார். திருமணம் செய்வதாக கூறி பெண்ணுடன், பிரதீப் பலமுறை உல்லாசமாக இருந்து உள்ளார்.
இதற்கிடையில் பிரதீப்புக்கு, மேலும் சில பெண்களுடன் தொடர்பு இருப்பது பற்றி, வெளிநாட்டு பெண்ணிற்கு சமீபத்தில் தெரிந்தது. இதுபற்றி அவரிடம் கேட்ட போது சரியான பதில் இல்லை.
இதையடுத்து தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்ததாக, மல்லேனஹள்ளி போலீசில் பெண் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரதீப்பை கைது செய்தனர். அவரால் வேறு பெண்கள் யாராவது பாதிக்கப்பட்டு உள்ளனரா என்றும், விசாரணை நடக்கிறது.