யோகா குரு ராம்தேவ் மன்னிப்பு ஏற்பு : வழக்கு முடித்து வைப்பு
யோகா குரு ராம்தேவ் மன்னிப்பு ஏற்பு : வழக்கு முடித்து வைப்பு
ADDED : ஆக 14, 2024 02:31 AM

புதுடில்லி : தவறான விளம்பரம் வெளியிட்ட வழக்கில், பதஞ்சலி நிறுவனம், யோகா குரு ராம்தேவ், நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோரின் மன்னிப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
எதிர்காலத்தில் இதுபோல் செயல்பட்டால் மீண்டும் விசாரிப்போம் என்ற எச்சரிக்கையுடன் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக, இந்திய மருத்துவர் சங்கம் வழக்கு தொடர்ந்திருந்தது.
அலோபதி மருத்துவத்துக்கு எதிராக கருத்து தெரிவிப்பதுடன், தன் ஆயுர்வேத மருந்துகள் தொடர்பாக தவறான தகவல்களை அளிக்கும் விளம்பரங்களை வெளியிடுவதாக, பதஞ்சலிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
கடந்தாண்டு நவம்பரில் இந்த வழக்கின் விசாரணையின்போது, தவறான தகவல்களை அளிக்கும் விளம்பரங்களை நிறுத்தி விடுவதாக பதஞ்சலி நிறுவனம், ராம்தேவ் மற்றும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா உறுதியளித்தனர்.
ஆனால், தொடர்ந்து அந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்டனர்.
ஆனால், உச்ச நீதிமன்றம் அதை ஏற்க மறுத்தது. விளம்பரம் கொடுத்ததுபோல், மன்னிப்பு கேட்டு விளம்பரம் கொடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், உத்தரவை முறையாக செயல்படுத்தப்படாததால், நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது.
இதையடுத்து, ராம்தேவ், பாலகிருஷ்ணா நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்டனர். மன்னிப்பு கேட்டு விளம்பரங்களும் கொடுக்கப்பட்டன.
இது தொடர்பாக விசாரித்த நீதிபதிகள் ஹீமா கோஹ்லி, அசானுதீன் அமானுல்லா அமர்வு, உத்தரவை தேதி குறிப்பிடாமல் மே 14ல் ஒத்திவைத்திருந்தது.
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பதஞ்சலி நிறுவனம், ராம்தேவ், பாலகிருஷ்ணாவின் மன்னிப்பு ஏற்கப்படுகிறது. இதனுடன் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து கொள்ளப்படுகிறது.
அதே நேரத்தில் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி இவர்கள் செயல்பட வேண்டும். மீறினால், மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

