நீங்கள் மன்னரும் இல்லை... இது மன்னராட்சியும் இல்லை; உத்தரகண்ட் முதல்வருக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு!
நீங்கள் மன்னரும் இல்லை... இது மன்னராட்சியும் இல்லை; உத்தரகண்ட் முதல்வருக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு!
UPDATED : செப் 05, 2024 12:51 PM
ADDED : செப் 05, 2024 12:48 PM

டில்லி: வனத்துறை அதிகாரி நியமன விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நியமனம்
வனத்தில் இருந்த மரங்களை சட்டவிரோதமாக வெட்டியதாக எழுந்த குற்றச்சாட்டில், கார்பெட் புலிகள் சரணாலய இயக்குநராக இருந்த ராகுல் என்பவர் இரு ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சூழலில், அவரை ராஜாஜி புலிகள் சரணாலய இயக்குநராக நியமித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டிருந்தார்.
வழக்கு
அவரது இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ராகுலின் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மன்னராட்சி
இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்., கவாய், பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 'நீங்கள் நினைத்ததை எல்லாமல் செய்வதற்கு, நீங்கள் மன்னரும் இல்லை, இது மன்னராட்சியும் இல்லை. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.
குட்டு
குற்றம்சாட்டப்பட்டுள்ள ராகுலுக்கு எதிரான துறை ரீதியான நடவடிக்கை கைவிடப்பட்டிருந்தால், அவரை வனஅதிகாரியாக நியமித்திருக்கலாம். வனத்துறை அமைச்சர், தலைமைச் செயலரின் முடிவில் இருந்து, மாறுபட்டிருந்தால், அதற்கான காரணத்தை முதல்வர் கூறியிருக்க வேண்டும். முதல்வராக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றில்லை,' என்று ஆவேசமாக தெரிவித்தனர்.
மேலும், வனஅதிகாரியாக ராகுல் நியமித்த அரசாணையை திரும்பப் பெறவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தது.