ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியதை கண்டித்த பெற்றோர், சகோதரியை கொன்ற இளைஞர்
ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியதை கண்டித்த பெற்றோர், சகோதரியை கொன்ற இளைஞர்
ADDED : மார் 05, 2025 04:24 AM
பாரதீப்; ஒடிசாவில் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியதைக் கண்டித்த, பெற்றோர் மற்றும் சகோதரியை இளைஞர் ஒருவர் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஒடிசாவில் ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் சேதி சாஹி பகுதியைச் சேர்ந்தவர் சூரஜ்கந்த் சேத்தி, 21. இவர், அப்பகுதியில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு சூரஜ்கந்த் சேத்தி, தன் அறையில் மொபைல் போனில் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி கிடந்தார்.
இதைப் பார்த்த அவரது பெற்றோர் பிரசாந்த், 65, கனகலதா, 62, மற்றும் சகோதரி ரோசலின், 25, ஆகிய மூவரும் சூரஜ்கந்தை கண்டித்தனர்.
இதனால் ஆத்திரம்அடைந்த சூரஜ்கந்த், வீட்டின் அருகே இருந்த கற்களை எடுத்து அவர்கள் மீது வீசியதுடன், கூர்மையான ஆயுதங்களாலும் தாக்கினார். இதில் மூவருக்கும் தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சூரஜ்கந்த், தலைமறைவானார்.
தகவலறிந்து வந்த போலீசார், மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தலைமறைவாக இருந்த சூரஜ்கந்த், அருகில் இருந்த கிராமத்தில் பதுங்கி இருந்ததைக் கண்டறிந்து, போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெற்றோர் மற்றும் சகோதரியை கொன்றதை ஒப்புக்கொண்டார்.