உங்கள் வீட்டு சாட்டிலைட் படம் தனியார் நிறுவனம் புது முயற்சி
உங்கள் வீட்டு சாட்டிலைட் படம் தனியார் நிறுவனம் புது முயற்சி
ADDED : ஜூலை 08, 2024 02:04 AM
புதுடில்லி : 'பிக்சல் ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனம் ஏவியுள்ள செயற்கைக்கோளில் இருந்து, யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையான புகைப்படத்தை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வசதியை அந்நிறுவனம் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது.
'கூகுள்' உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியிடும் செயற்கைக்கோள் புகைப்படங்களை யார் வேண்டுமானாலும் கணினி வழியே காணும் வாய்ப்பு நடைமுறையில் உள்ளது. இந்த புகைப்படங்கள் குறிப்பிட்ட தரத்தில் மட்டுமே கிடைக்கின்றன.
'பிக்சல் ஸ்பேஸ்' என்ற தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனம், அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் வாயிலாக இரண்டு செயற்கைக்கோள்களை கடந்த ஆண்டு ஏவியது.
இந்த செயற்கைக்கோள்கள் பூமியின் உயர்தர புகைப்படங்களை சேகரித்து வருகின்றன. மனித கண்களுக்கு புலப்படாத நுண்ணிய விபரங்களை கூட இந்த செயற்கைக்கோளில் உள்ள உயர் ரக கேமராக்கள் படம் பிடித்து வருகின்றன.
இந்த புகைப்படங்களை, Pixel.Space/Aurora என்ற இணையதளம் வாயிலாக யார் வேண்டுமானாலும் அணுக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 'அரோரா' என்ற மென்பொருள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
பூமியின் புகைப்படங்களை காண்பது மட்டுமின்றி, ஒருவர் தன் வீடு அல்லது தோட்டத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை கூட இந்த இணையதளத்தில் இருந்து பெற முடியும்.
இதற்கு சிறிய கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக பிக்சல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதி இந்த ஆண்டு இறுதியில் நடைமுறைக்கு வருகிறது.