காங்கிரசின் முகத்தை காண இளைஞர்கள் விரும்பவில்லை: பிரதமர் மோடி தாக்கு
காங்கிரசின் முகத்தை காண இளைஞர்கள் விரும்பவில்லை: பிரதமர் மோடி தாக்கு
ADDED : ஏப் 21, 2024 04:38 PM

ஜெய்ப்பூர்: காங்கிரசின் முகத்தை மீண்டும் காண இளைஞர்கள் விரும்பவில்லை என ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.
ராஜஸ்தானில் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 12 தொகுதிகளுக்கு முதல் கட்ட ஓட்டுப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடந்தது. மீதமுள்ள 13 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜாலோர் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ராஜஸ்தானில் இருந்து முன்பு மன்மோகன் ராஜ்யசபா எம்.பி.யானார். தற்போது மற்றுமொரு காங்., தலைவர் எம்.பி.,ஆகி உள்ளார்.
ஊழல்
வெற்றி பெற முடியாது என்பதை தெரிந்து தான் ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு எம்.பியாக வருகின்றனர். ஊழலை பரப்பி நாட்டையே குழி தோண்டி புதைத்துவிட்டது காங்கிரஸ் கட்சி. காங்கிரசின் முகத்தை மீண்டும் காண இளைஞர்கள் விரும்பவில்லை. காங்கிரசும், அதன் கூட்டணியும் நாட்டை ஒருபோதும் சரியாக நடத்த முடியாது.
காங்கிரசை விளாசிய மோடி
இன்றைய நிலைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். 60 ஆண்டுகால ஆட்சியில் செய்த பாவங்களுக்காக காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டிக்கிறார்கள்.
ஒரு காலத்தில் 400 இடங்களில் வெற்றி பெற்ற அக்கட்சி இந்த லோக்சபா தேர்தலில் 300 இடங்களில் கூட தனியாக போட்டியிட முடியவில்லை. காங்கிரசால் ஒரு போதும் இந்தியாவை வலிமையாக்க முடியாது. 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைமை மீண்டும் வருவதை நாடு விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

