ADDED : மே 10, 2024 11:11 PM
புதுடில்லி:தென்கிழக்கு டில்லி ஜாமியா நகரில் வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் அதே இடத்தில் உயிரிழந்தார்.
ஜாமியா நகரில் நேற்று முன் தினம் அதிகாலை 5:00 மணிக்கு, ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த ஒரு பெண் அலறினார்.
இதையடுத்து, அந்த வாலிபர் அடுத்த வீட்டு மொட்டை மாடிக்குத் தாவினார். அதற்குள் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் திரண்டனர்.
அங்கிருந்து அடுத்த மாடிக்கு தாவ முயன்ற வாலிபர் கால் தவறி விழுந்தார். அதே இடத்தில் உடல் சிதறி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து போலீசார் வந்தனர். உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணை நடத்தியதில் ஓக்லா விஹாரைச் சேர்ந்த முகமது யாசீன், 26, என்பது தெரிய வந்தது.
அவருடைய அண்ணன் முகமது ஆசம் வந்து உடலை அடையாளம் காட்டினார்.
மேலும், 'தன் தம்பி மனநிலை சரியில்லாதவர். ஓராண்டுக்கும் மேலாக வீட்டில் இல்லை'என்றார்.
ஆனால், அந்த வாலிபர் திருட வந்த இடத்தில் மாட்டிக் கொண்டதால் ஓடும்போது தவறி விழுந்துள்ளார் என அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.