ADDED : மே 05, 2024 05:49 AM
ஹூப்பள்ளி: சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்தபோது, போலீஸ் ஏட்டை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற, வாலிபர் சுட்டுபிடிக்கப்பட்டார்.
ஹூப்பள்ளி நவநகரில் சதாம் உசேன், 22. இவரும் வேறு சமூகத்தை சேர்ந்த 15 வயது, சிறுமியும் காதலித்தனர். சிறுமியை, சதாம் உசேன் அடிக்கடி மிரட்டி, பலாத்காரம் செய்து உள்ளார். இதுபற்றி பெற்றோரிடம் கூறினால், கொன்று விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி, யாரிடமும் சொல்லவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு, சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. பெற்றோர் கேட்டபோது, சதாம் உசேன் மிரட்டி பலாத்காரம் செய்தது பற்றி கூறினார். நவநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. சதாம் உசேனை போலீசார் தேடினர்.
ஹூப்பள்ளி வித்யாநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக, நவநகர் இன்ஸ்பெக்டர் சங்கமேஸ்வருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை, வித்யாநகருக்கு போலீசார் சென்றனர்.
பாழடைந்த வீட்டில் பதுங்கி இருந்த, சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். ஜீப்பில் ஏற்றும்போது, ஏட்டு அருணை கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.
அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் சங்கமேஸ்வர், துப்பாக்கியால் ஒரு ரவுண்டு வானத்தை நோக்கி சுட்டு, சரண் அடையுமாறு எச்சரித்தார். ஆனால் சதாம் உசேன் கேட்கவில்லை. இதனால் அவரது வலது காலில், இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டார்.
குண்டு அடிபட்டு சுருண்டு விழுந்த, சதாம் உசேனை போலீசார் கைது செய்தனர். ஹூப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ஏட்டு அருணுக்கும் சிகிச்சைஅளிக்கப்படுகிறது.