பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் அத்துமீறி வீடியோ எடுத்த 'யு டியூபர்' கைது
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் அத்துமீறி வீடியோ எடுத்த 'யு டியூபர்' கைது
ADDED : ஏப் 18, 2024 04:34 AM

பெங்களூரு : பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் நுழைந்து, வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த, 'யு டியூபர்' கைது செய்யப்பட்டார்.
பெங்களூரை சேர்ந்தவர் விகாஸ் கவுடா, 23. யு டியூபரான இவர், 60க்கும் மேற்பட்ட பல்வேறு சாகச வீடியோக்களை எடுத்துள்ளார். ஒவ்வொன்றையும், 2.5 லட்சம் முதல் 3.5 லட்சம் பேர் வரை பார்த்துள்ளனர். 1.2 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
கடந்த பிப்., 7ம் தேதி பெங்களூரில் இருந்து சென்னை செல்ல டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் போர்டிங்கிற்கு செல்லவில்லை.
விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில், தன்னிடம் இருந்த சிறிய கேமரா மூலம் வீடியோ எடுத்து, சில நாட்கள் கழித்து, தனது யு டியூப் தளத்தில் பதிவேற்றம் செய்தார். அத்துடன், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதை பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முரளிலால் மீனா, விமான நிலைய போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து, அவரிடம் இருந்த மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஒரு அதிகாரி கூறியதாவது:
வீடியோ எடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே, ஏப்., 7ம் தேதி பெங்களூரு - சென்னைக்கு டிக்கெட் எடுத்துள்ளார். மதியம் 12:06 மணிக்கு அனைத்து பாதுகாப்பு சோதனைக்கு பின், போர்டிங் நுழைவு வாசலுக்கு செல்லவில்லை. தன்னிடம் உள்ள வீடியோ கேமரா மூலம், தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து, வீடியோ எடுத்துள்ளார்.
அப்போது கன்னடத்தில், 'விமான நிலையத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்பதை ஒரு நாள் முழுதும் இருந்து நிரூபிக்கிறேன்' என்று கூறியுள்ளார். ஆனால், மாலை 6:30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து வெளியேறி விட்டார். இது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.
மிகவும் நுட்பமான பகுதியில் இதுபோன்று வீடியோ எடுப்பது, அநாகரிகமாக நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

