ADDED : பிப் 21, 2025 09:58 PM
ஐ.பி., எஸ்டேட்:முதல்வர் ரேகா குப்தாவுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற பா.ஜ., அமைச்சர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
டில்லி முதல்வராக ஷாலிமார் பாக் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வான ரேகா குப்தா நேற்று முன்தினம் பதவியேற்றார். இதையடுத்து அவருக்கு 'இசட்' பிரிவு உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.
ஷாலிமார் பாகில் உள்ள முதல்வர் இல்லத்தில் நேற்று முன்தினமே 'இசட்' பிரிவு பாதுகாப்புப் படையினர் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். 22 முதல் 25 கொண்ட பாதுகாப்பு பிரிவினர் 24 மணி நேரமும் முதல்வருக்கு பாதுகாப்பு வழங்குவர்.
மாநில புதிய அமைச்சர்களை பொருத்தவரையில் நான்கு பேருக்கு ஏற்கனவே டில்லி போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
முதல்வரைப் போலவே சுகாதாரத்துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சாவுக்கும் 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பர்வேஷ் சாஹிப் சிங், கபில் மிஸ்ரா, ஆஷிஷ் சூட் ஆகியோருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
'அமைச்சர்கள் ரவீந்தர் இந்திரஜ் சிங், பங்கஜ் சிங் ஆகியோருக்கு இதுவரை எந்த பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்' என, டில்லி காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் நெறிமுறையின்படி, டில்லி முதல்வருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கமான நடைமுறை.