போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிக்கு ரூ.1 கோடி இழப்பீடு
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிக்கு ரூ.1 கோடி இழப்பீடு
ADDED : பிப் 23, 2024 11:10 PM
சண்டிகர்: ''விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங்கின் குடும்பத்துக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் அவரது சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும்,'' என, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் அறிவித்து உள்ளார்.
விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 13ம் தேதி தலைநகர் டில்லியை நோக்கி, பஞ்சாப், ஹரியானா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் முற்றுகை பேரணியை அறிவித்தனர்.
முன்னெச்சரிக்கையாக டில்லியின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டு விட்டதால், எல்லை பகுதி அருகே விவசாயிகள் போராடி வருகின்றனர்.
பஞ்சாப் - ஹரியானா எல்லையான கானவுரியில், கடந்த 21ம் தேதி, விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பஞ்சாபின் பதிண்டா மாவட்டத்தைச் சேர்ந்த சுப்கரன் சிங், 21, என்ற விவசாயி உயிரிழந்தார். இதில், 10க்கும் மேற்பட்ட போலீசாரும் காயமடைந்தனர்.
இந்நிலையில், ''உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங்கின் குடும்பத்துக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் அவரது தங்கைக்கு அரசு வேலை வழங்கப்படும்,'' என, ஆம் ஆத்மியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.