வங்க தேசத்தில் நிலைமை மோசம்; இந்தியாவுக்கு அகதியாக வந்த ஹிந்துக்கள் 10 பேர் சொல்வது இதுதான்!
வங்க தேசத்தில் நிலைமை மோசம்; இந்தியாவுக்கு அகதியாக வந்த ஹிந்துக்கள் 10 பேர் சொல்வது இதுதான்!
ADDED : டிச 08, 2024 08:43 AM

அகர்தலா: இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக, வங்கதேசத்தை சேர்ந்த ஹிந்துக்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், 'வங்க தேசத்தில் ஹிந்துக்கள் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள்' என்றார்.
வங்கதேசத்தில் தொடர்ந்து ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்கள் மீதும், அவர்களது வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கிருந்து ஹிந்துக்கள் அகதியாக வெளியேற தொடங்கியுள்ளனர். இவ்வாறு வந்த 10 பேர் திரிபுராவில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அம்பாசா ரயில் நிலையத்தில் இருந்து அசாமில் உள்ள சில்சார் செல்லும் ரயிலில் ஏற முயன்ற, இரண்டு பெண்கள், மூன்று இளைஞர்கள் மற்றும் ஒரு முதியவர் உட்பட வங்கதேசத்தை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவருமே ஹிந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான, சங்கர் சந்திர சர்க்கார் கூறியதாவது: எந்த சூழ்நிலையிலும் நாங்கள் வங்கதேசத்திற்கு திரும்ப மாட்டோம். வங்கதேசத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஹிந்துக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கிறது.
இந்தியாவுக்குத் தப்பி வருவதற்கு முன்பு எங்களுடைய சில சொத்துக்களை விற்று விட்டோம். ஆனால் வீட்டுப் பொருட்கள், இன்னும் உள்ள சொத்துக்கள் ஆகியவற்றை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டோம். ஆயிரக்கணக்கான ஹிந்து குடும்பங்கள் இந்தியாவிற்கு வர விரும்புகின்றனர்.
பல்வேறு காரணங்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசின் ஆட்சியின் போது, நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம், எங்கள் பகுதிகளில் ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பகை இல்லை. ஆனால் முஹம்மது யூனுஸ் தலைமையிலான காபந்து அரசாங்கம் பதவியேற்ற பிறகு, நாங்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.