காட்டில் இருந்த காரில் 52 கிலோ தங்கம்; ரூ.10 கோடி: 'வெலவெலத்த' போபால் போலீஸ்!
காட்டில் இருந்த காரில் 52 கிலோ தங்கம்; ரூ.10 கோடி: 'வெலவெலத்த' போபால் போலீஸ்!
ADDED : டிச 20, 2024 06:33 PM

போபால்: போபால் அருகே வனப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த காரில், 52 கிலோ தங்கக்கட்டிகள், 10 கோடி ரொக்கம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இது பற்றிய விவரம் வருமாறு;
மெண்டேரி வனப்பகுதி வழியாக தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, 30 வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது வனப்பகுதியில் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வர சந்தேகம் கொண்ட போலீசார் அந்த காரை சுற்றி வளைத்தனர். நீண்ட நேரமாக அதில் இருந்து யாரும் இறங்கி வராததால் சந்தேகம் கொண்ட போலீசார், காரை சோதனையிட்டனர்.
அவர்களின் சோதனையில் காரினுள் யாரும் இல்லாதது தெரிய வந்தது. உடனடியாக, காரை சோதனையிட்டனர். உள்ளே ஏதேனும் ஆயுதங்கள் கிடைக்கும் என்று எண்ணியிருந்த அவர்களின் கைகளில் சிக்கியது 2 பெரிய பைகள் மட்டுமே.
அவற்றை பிரித்து பார்த்த போது போலீசாருக்கு மயக்கம் வராத குறைதான். 2 சாக்குப்பைகளிலும் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள், தங்கக்கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த பைகளில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள 52 கிலோ தங்கக்கட்டிகள், 10 கோடி ரூபாய் இருப்பதை கண்டனர்.
ஒட்டுமொத்தமாக அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அந்த கார் குவாலியரைச் சேர்ந்த சேத்தன் கவுர், முன்னாள் கான்ஸ்டபிள் சவுரவ் சர்மா ஆகியோருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர். இதில் சவுரவ் சர்மா மீதும், ஏராளமான கட்டுமான நிறுவனத்தினர் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதையும் கண்டுபிடித்தனர்.
ஆனால் இந்த பணமும், தங்கக்கட்டிகளும் எப்படி வந்தது, காருடன் அனைத்தையும் காட்டில் கொண்டு வந்து நிறுத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, சவுரவ் சர்மா வீட்டில் சில நாட்கள் முன்பு லோக்ஆயுக்தா போலீசார் ரெய்டு நடத்தி ஒரு கோடி ரொக்கம், அரைகிலோ தங்கம், வைரம், வெள்ளிக் கட்டிகள், சொத்து பத்திரங்களை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.