சாலையோர வியாபாரிகள் மீது லாரி மோதல்; தெலுங்கானாவில் 10 பேர் பலி
சாலையோர வியாபாரிகள் மீது லாரி மோதல்; தெலுங்கானாவில் 10 பேர் பலி
ADDED : டிச 02, 2024 07:15 PM

ஹைதராபாத்; தெலுங்கானா மாநிலத்தில் சாலையோர காய்கறி வியாபாரிகள் மீது லாரி மோதியதில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் அளுர் கேட் என்ற பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. செவாலா, பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளூரைச் சேர்ந்த வியாபாரிகள் சிலர் காய்கறிகளை விற்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது அதே சாலையில் அசுர வேகத்தில் வந்த லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வியாபாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். டிரக் லாரி டிரைவர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசாரும், ஊர் மக்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயம் அடைந்து போராடிக் கொண்டிருந்த பலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் முறையாக சாலை விதிகளை பின்பற்றாததால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாகவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊர்மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.