மூன்று நாளில் 10 யானைகள் ம.பி.,யில் மர்மமாக இறப்பு
மூன்று நாளில் 10 யானைகள் ம.பி.,யில் மர்மமாக இறப்பு
ADDED : நவ 02, 2024 11:49 PM
போபால்: மத்திய பிரதேசத்தில், பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் மூன்று நாட்களில், 10 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிய, அவற்றின் மாதிரிகள் உத்தர பிரதேசத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு உமாரியா மாவட்டத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சங்கனி, பகேலி பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில், 10 யானைகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தன.
வயலில் பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட கம்பு வகைகளை யானைகள் சாப்பிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
இதற்கிடையே, யானைகள் உயிரிழப்பு குறித்து முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, உமாரியா மாவட்டத்துக்கு சென்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி, மாநில வனத்துறை இணை அமைச்சர் திலீப் அஹிர்வார், வனத்துறைக்கான கூடுதல் தலைமைச் செயலர் அசோக் பர்ன்வால் உள்ளிட்டோருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் எல்.கிருஷ்ணமூர்த்தி நேற்று கூறியதாவது:
உயிரிழந்த யானைகளின் மாதிரிகள் மற்றும் அவற்றின் கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளை, உ.பி.,யின் ரேபரேலியில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்., - -இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளோம்.
மேலும், ம.பி.,யின் சாகரில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கும் அனுப்பி உள்ளோம். யானைகள் இறப்புக்கு 'கோடோ' தினை வகை காரணமாக இருக்கலாம் என, பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனினும், ஆய்வக பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே, இறப்புக்கான உண்மையான காரணம் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பு மண்டலத்துக்கு வெளியே, இயற்கை உபாதை கழிக்கச் சென்ற முதியவர் ராம்ரதன் யாதவ், 65, என்பவர் காட்டு யானைகள் தாக்கியதில் உயிரிழந்தார்.