கர்நாடகா ஊழல் வழக்கில் கைதானவரிடம் 10 கிலோ தங்கம் பறிமுதல்!
கர்நாடகா ஊழல் வழக்கில் கைதானவரிடம் 10 கிலோ தங்கம் பறிமுதல்!
ADDED : ஜூலை 27, 2024 11:56 PM

பெங்களூரு:கர்நாடகாவில் வால்மீகி மேம்பாட்டு ஆணைய ஊழல் வழக்கின் விசாரணை சூடுபிடித்துள்ளது. வழக்கில் கைதான ஹைதராபாதின் கூட்டுறவு வங்கி சேர்மன் சத்யநாராயண வர்மா, தன் சொகுசு பிளாட்டில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ தங்க பிஸ்கட்டுகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், 5 கிலோ தங்கத்தை தேடி வருகின்றனர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, பழங்குடியினர் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தும் வால்மீகி மேம்பாட்டு ஆணையம் இயங்கி வருகிறது. இந்த ஆணையத்தின் கண்காணிப்பாளர் சந்திரசேகர், 50, இரண்டு மாதங்களுக்கு முன், ஷிவமொகாவில் தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவர் இறப்பதற்கு முன், எழுதி வைத்திருந்த கடிதத்தில், ஆணையத்துக்கு சொந்தமான 87 கோடி ரூபாயை, சட்டவிரோதமாக வேறு கணக்குகளுக்கு மாற்ற தனக்கு சிலர் நெருக்கடி கொடுத்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
இது, மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. வால்மீகி ஆணையம், பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் நலத்துறை கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. அத்துறையின் அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியதால், அவரும் பதவி விலகினார்.
பரிமாற்றம்
முறைகேடு குறித்து விசாரணை நடத்த மாநில அரசு, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதால், அமலாக்கத் துறையும் களத்தில் இறங்கி, நாகேந்திராவை கைது செய்து விசாரணை நடத்துகிறது.
இதற்கிடையே, வால்மீகி ஆணையத்தின் பல கோடி ரூபாய், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதின் கூட்டுறவு வங்கி உட்பட பல்வேறு வங்கிகளுக்கு பரிமாற்றம் ஆகியிருப்பதை, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ஹைதராபாதின் பர்ஸ்ட் பைனான்ஸ் கிரெடிட் கோ ஆப்பரேடிவ் சொசைட்டி சேர்மன் சத்யநாராயண வர்மா உட்பட, பலரை கைது செய்து விசாரிக்கின்றனர். தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக, கர்நாடகாவில் இருந்து இந்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
விசாரணை
சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில், சத்யநாராயண வர்மாவுக்கு முக்கிய பங்குள்ளது. இவரை பெங்களூரு அழைத்து வந்து, விசாரணை நடத்துகின்றனர். முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தவுடன், ஹைதராபாதில் உள்ள இவரது வீட்டை சோதனையிட்ட போது, 8 கோடி ரூபாய் சிக்கியது.
தொடர் விசாரணையில், சத்யநாராயண வர்மா, வால்மீகி ஆணைய பணத்தில், ஹைதராபாதின் சீமா பேட், மீயாபுராவில் தலா இரண்டு சொகுசு பிளாட்டுகள் உட்பட, வாசவி பில்டர்சிடம் 11 பிளாட்டுகள் வாங்கியதை ஒப்புக்கொண்டார்.
அது மட்டுமின்றி, கிலோ கணக்கில் தங்க பிஸ்கட்டுகள் வாங்கியுள்ளதை, அதிகாரிகள் கண்டுபிடித்தனர். முதலில் இதை பற்றி அவர் வாயை திறக்கவில்லை.
தனிப் படையினர் ஹைதராபாத் சென்று, அவரது குடும்பத்தினர், நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது தங்கம் வாங்கியது தெரிந்தது. அதன்பின் விசாரணை நடத்திய போது, ஹைதராபாதில் ஒரு சொகுசு பிளாட்டில் பதுக்கி வைத்துள்ளதை கூறினார்.
கடந்த 25ம் தேதி அங்கு சென்ற எஸ்.ஐ.டி., அதிகாரிகள், பிளாட்டில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்து, பெங்களூரு கொண்டு வந்தனர்.
தகுதி நீக்கம்
சத்யநாராயண வர்மா, மொத்தம் 15 கிலோ தங்கம் வாங்கியுள்ளார். அதில், 10 கிலோவை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மீதமுள்ள 5 கிலோ தங்கத்தை, வேறு இடத்தில் பதுக்கியுள்ளார். இதை கண்டுபிடிக்க அதிகாரிகள் முயற்சிக்கின்றனர்.
வால்மீகி ஆணையத்தின் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம், பல்லாரி லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்தியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது, வரும் நாட்களில், பல்லாரி காங்கிரஸ் எம்.பி., துக்காராமின் பதவியை ஆட்டம் காண வைத்தாலும், ஆச்சரியப்பட முடியாது. இவரை எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யும்படி, ஏற்கனவே தேர்தல் கமிஷனில் பா.ஜ., புகார் அளித்துள்ளது.