UPDATED : நவ 22, 2024 12:37 PM
ADDED : நவ 22, 2024 12:34 PM

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் மாவோயிஸ்ட்டுகள் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மாவோயிஸ்ட்டுகள் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக சத்தீஸ்கர் இருந்து வருகிறது. இங்கு மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கத்தையும், நடமாட்டத்தையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் நாராயன்பூர் - தந்தேவாடா எல்லையில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே., ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஒடிசாவில் இருந்து சத்தீஸ்கருக்குள் மாவோயிஸ்ட்டுகள் நுழைவதாக உளவுத்துறையின் மூலம் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், கொண்டா பகுதியில் அவர்களை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு மாவோயிஸ்ட்டுகளும் தாக்குதல் நடத்தினர். இதில், மாவோயிஸ்ட்டுகள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரு தரப்பினரிடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருவதால், சத்தீஸ்கரில் பதற்றம் நிலவி வருகிறது.