10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை; சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை அதிரடி
10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை; சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை அதிரடி
ADDED : நவ 23, 2024 08:40 AM

சுக்மா: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பஸ்தர் நிர்வாகப் பிரிவின் கீழ் பஸ்தர், சுக்மா, கொண்டாகவுன், காங்கேர், நாராயண்பூர், தாண்டேவாடா, பீஜாபூர் ஆகிய மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் நக்சலைட்டுகள் அட்டகாசம் அதிகரித்ததை அடுத்து, அதை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊடுருவல்
இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் உள்ள கோரஜ்குடா, தாண்டேஸ்புரம், நகரம், பந்தார்பதார் கிராமங்களில் நக்சல்கள் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர், பெஜ்ஜி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களை சுற்றி வளைத்து, அவர்களை சரணடையும்படி உத்தரவிட்டனர்.
அதற்கு பதிலளிக்காமல், பாதுகாப்பு படையினரை நோக்கி நக்சல்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நீடித்தது.
இதில், நக்சல்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
எஞ்சியவர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், அவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுஉள்ளனர்.
வெடி பொருட்கள்
சம்பவம் நடந்த பகுதியில் இருந்து ஏராளமான துப்பாக்கிகள், வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இறந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இந்தாண்டு மட்டும் இதுவரை, 257 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர, 861 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 789 பேர் சரணடைந்துஉள்ளனர்.
நக்சல் தாக்குதலில் இந்தாண்டு, 96 பேரும், கடந்த 2010ல், 1,005 பேரும் உயிரிழந்திருந்தனர்.