கொல்கட்டாவில் மின்சாரம் பாய்ந்து 10 பேர் பலி: அரசு - தனியார் நிறுவனம் பரஸ்பர குற்றச்சாட்டு
கொல்கட்டாவில் மின்சாரம் பாய்ந்து 10 பேர் பலி: அரசு - தனியார் நிறுவனம் பரஸ்பர குற்றச்சாட்டு
ADDED : செப் 25, 2025 01:33 AM

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், மின்சாரம் பாய்ந்து 10 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், மாநில அரசும், தனியார் மின் வினியோக நிறுவனமான சி.இ.எஸ்.சி., எனப்படும் கொல்கட்டா மின் வினியோக கழகமும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றன.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இரு தினங்களுக்கு முன் மேகவெடிப்பு காரணமாக விடிய, விடிய பெய்த கனமழையால் கொல்கட்டா, ஹவுரா உட்பட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.
இடுப்பளவுக்கு வெள்ள நீர் உயர்ந்ததால், சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மக்களும் வீடுகளிலேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அலட்சியம்
இதற்கிடையே, கனமழையால், மின்சாரம் பாய்ந்ததில் கொல்கட்டா, ஹவுரா உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், 9 பேர் மின்சாரம் பாய்ந்து பலியாகினர்.
அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மம்தா, 'இந்த துயரச் சம்பவத்திற்கு மின் வினியோகம் செய்யும் தனியார் நிறுவனமான சி.இ.எஸ்.இ.,யின் அலட்சியமே காரணம்' என, குற்றஞ்சாட்டினார். 'இதனால், அந்நிறுவனமே, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும்' என, கூறினார்.
இந்நிலையில், முதல்வரின் இந்த குற்றச்சாட்டு குறித்து வீடியோ வெளியிட்டு சி.இ.எஸ்.சி., நிறுவன செய்தி தொடர்பாளர் அவிஜித் கோஷ் கூறியிருப்பதாவது:
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோர் குறித்து நாங்கள் விரிவாக ஆய்வு நடத்தினோம். அதில், ஐந்து பேர் வீடுகள் மற்றும் தொழிற்சாலையில், தவறாக மேற்கொள்ளப்பட்ட ஒயரிங் பணியால் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
கனமழையின்போது தெரு விளக்கு கம்பத்தை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்துள்ளனர். மற்றொருவர், டிராபிக் சிக்னல் கம்பத்தை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
வருத்தம்
தெரு விளக்கு கம்பங்கள், டிராபிக் சிக்னல் விளக்குகளை எங்கள் நிறுவனம் பராமரிக்கவில்லை. எங்கள் குழு 24 மணி நேரமும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
கனமழையால், மின் இணைப்புகளை துண்டித்து இருக்கிறோம்.
இதனால் ஏற்பட்ட அசவுகரியங்களுக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் நிலைமை சீராகும். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கொல்கட்டா மற்றும் ஹவுரா சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் வினியோகம் செய்து வரும் சி.இ.எஸ்.சி., நிறுவனம், பிரபல தொழிலதிபர் சஞ்சீவ் கோயங்காவின் தொழிற் குழுமத்தை சேர்ந்தது. 'லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்' ஐ.பி.எல்., கிரிக்கெட் அணியும், இந்த குழுமத்தை சேர்ந்தது.