ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் உயிரிழப்பு: 16 மணி நேர போராட்டம் வீண்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் உயிரிழப்பு: 16 மணி நேர போராட்டம் வீண்
ADDED : டிச 29, 2024 11:35 PM

போபால்: மத்திய பிரதேசத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவனை, 16 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்ட நிலையில், அவன் நேற்று உயிரிழந்தான்.
மத்திய பிரதேச மாநிலம் குணா அருகே உள்ள பிப்லியா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சுமித் மீனா, 10. நேற்று முன்தினம் மாலை வீட்டருகே விளையாடிய சிறுவன், திறந்தநிலையில் இருந்த 140 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். இதைப்பார்த்த சக சிறுவர்கள் உடனே அவனின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.
ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சிக்கிய தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
சிறுவன் 39 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது தெரியவந்தது. அவனை மீட்பதற்காக ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில், அதற்கு இணையாக குழி வெட்டி மீட்க முடிவு செய்தனர்.
சிறுவனுக்கு மேலே இருந்து உயிர் காக்கும் ஆக்சிஜன் சப்ளையும் வழங்கப்பட்டது. பொக்லைன் இயந்திரம் கொண்டு, 16 மணி நேரம் பள்ளம் தோண்டி நேற்று காலை 9:30 மணிக்கு சிறுவனை மீட்டனர். உடனடியாக அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.
சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இரவு முழுதும் கடும் குளிரில் இருந்த காரணத்தால், வெப்பநிலை குறைந்து சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.