ரிசர்வ் வங்கி அங்கீகாரமின்றி கடன் வழங்கினால் 10 ஆண்டு சிறை
ரிசர்வ் வங்கி அங்கீகாரமின்றி கடன் வழங்கினால் 10 ஆண்டு சிறை
ADDED : டிச 20, 2024 06:45 AM

புதுடில்லி: அங்கீகாரமின்றி செயல்படும் கடன் வழங்கும் நிறுவனங்கள், தனி நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள கடன் நடவடிக்கைகளை தடை செய்யும் மசோதா குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
நாடு முழுதும் உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் கடன் வழங்கும் நிறுவனங்கள், தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, பணிக் குழு ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி நியமித்தது. அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில், உரிய அங்கீகாரமின்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், கடன் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் விதமாக, 'பியுலா' எனப்படும் ஒழுங்கற்ற கடன் நடவடிக்கைகளை தடை செய்தல் மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துஉள்ளது. இந்த மசோதா தொடர்பான பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ள மத்திய அரசு, அதை அடுத்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதிக்குள் அனுப்பலாம் என கால அவகாசம் நிர்ணயித்துள்ளது.