ADDED : மார் 06, 2026 01:35 AM

புதுடில்லி: டில்லியின் ரிதாலா என்ற இடத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், நுாற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயி ல் எரிந்து நாசமாகின. அந்த களேபரத்தில், 17 வயது சிறுமி ஒருவரின் கருகிய உடல் மீட்கப்பட்டது.
டில்லி வட மேற்கு மாவட்டத்தில் உள்ள ரிதாலா என்ற இடத்தில், ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. அந்த வீடுகளில் பீஹார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஏழை தொழிலாளர்கள் வசித்து வந்தனர்.
அந்த பகு தியில் நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு தீப்பிடித்ததாக, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. 20க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர்.
அருகருகே, மிகவும் நெருக்கமாக இருந்த அந்த குடிசை வீடுகளில் பல, அந்த பகுதியில் செயல்பட்ட கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கிடங்குகளாக செயல்பட்டன. இதனால், அந்த பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் பொருட்களின் கிட்டங்கிகள் இருந்தன. அங்கு பற்றிய தீ, கட்டுக்கடங்காமல் அருகில் இருந்த பகுதிகளுக்கும் பரவியது.
இதில், 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீக்கிரையாகின. இந்த களேபரத்தில், 17 வயது சிறுமி ஒருவரை காணவில்லை என அவ ரின் குடும்பத்தினர் தேடிக் கொண்டிருந்தனர். தீ முற்றிலும் அணைக்கப்பட்ட பின், அந்த பகுதியில் இருந்த வீடு ஒன்றில் இருந்து, முழுவதும் கருகி, இறந்த நிலையில் அந்த சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
இதையடுத்து, எதற்காக அந்த பகுதியில் தீப்பிடித்தது என்பது குறித்து விசாரணை நடத்திய தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், மின்சார இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வே, அதிகாலையில் தீப்பிடித்திருக்கலாம் என கருதினர்.
தீயில் கருகி இறந்த சிறுமியின் உடலை மீட்டுள்ள போலீசார், அவர் யார் என விசாரித்து வருகின்றனர்.
