கும்பமேளாவில் தீ! சிலிண்டர்கள் வெடித்ததால் 100 கூடாரங்கள் எரிந்தன
கும்பமேளாவில் தீ! சிலிண்டர்கள் வெடித்ததால் 100 கூடாரங்கள் எரிந்தன
UPDATED : ஜன 20, 2025 12:36 AM
ADDED : ஜன 19, 2025 11:19 PM

மஹாகும்ப நகர்:உத்தர பிரதேசத்தில், மஹா கும்பமேளா நடக்கும் பகுதியில், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நேற்று வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 100க்கும் அதிகமான கூடாரங்கள் எரிந்தன. தீயணைப்பு படையினர் உடனடியாக களத்தில் இறங்கி தீயை அணைத்ததால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நடக்கிறது.
கடந்த, 13ம் தேதி துவங்கிய இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்ச்சி, அடுத்த மாதம், 26ம் தேதி வரை நடக்க உள்ளது. மஹா கும்பமேளாவுக்கு, 40 கோடிக்கும் அதிகமானோர் வந்து, திரிவேணி சங்கமத்தில் நீராடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரிவேணி சங்கமம்
கங்கை, யமுனை மற்றும் புராணத்தில் கூறப்பட்டுள்ள சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நேற்று முன்தினம் வரை, ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர். நேற்று மட்டும், 46.95 லட்சம் பேர் புனித நீராடினர்.
கும்பமேளாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள மஹாகும்ப நகரில் ஏராளமான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 'செக்டார் - 19'ல் உள்ள ஒரு கூடாரத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நேற்று திடீரென வெடித்து சிதறின.
இதை தொடர்ந்து கூடாரத்தில் தீ பிடித்தது. சில வினாடிகளில் அடுத்தடுத்த கூடாரங்களுக்கும் தீ பரவியது. அந்த பகுதி முழுதும் தீப்பிழம்பாக காட்சி அளித்தது. அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் பதறியடித்து ஓடினர்.
உடனடியாக, 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களம் இறங்கி தீயை அணைத்தனர். அதற்குள், 100க்கும் மேற்பட்ட கூடாரங்கள் தீயில் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
இது குறித்து பிரயாக்ராஜ் மாவட்ட கலெக்டர் ரவீந்திர குமார் கூறுகையில், ''செக்டார் - 19ல் அமைந்துள்ள கீதா பிரஸ் கூடாரத்தில் மாலை, 4:30 மணிக்கு இரண்டு சிலிண்டர்கள் வெடித்தன.
முதல்வர் பார்த்தார்
''அருகில் இருந்த கூடாரங்களுக்கும் தீ பரவியது. இந்த பகுதியில் முன் எச்சரிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது,'' என்றார்.
தீ விபத்து நடந்த இடத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டார். பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து தகவல் அளிக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆதித்யநாத்தை தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி தொடர்பு கொண்டு, விபத்து குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.
''நிலைமை கட்டுக்குள் உள்ளது. துறவிகளுக்கும், பக்தர்களுக்கும் வேண்டிய உதவிகளை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்,'' என, துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்தார்.