ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100 ஆண்டு பயணம் மகத்துவமானது: பிரதமர் மோடி பெருமிதம்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100 ஆண்டு பயணம் மகத்துவமானது: பிரதமர் மோடி பெருமிதம்
UPDATED : அக் 03, 2025 07:33 AM
ADDED : அக் 01, 2025 07:14 PM

புதுடில்லி: டில்லியில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயம் ஆகியவற்றை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100 ஆண்டு பயணம் மகத்துவமானது. நாட்டிற்காக அந்த அமைப்பு பணியாற்றி வருகிறது எனக்குறிப்பிட்டார்.
ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம், 1925ல் விஜயதசமி நன்னாளில் மஹாராஷ்டிராவின் நாக்பூரில் துவங்கப்பட்டது. இந்த இயக்கத்தை, டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் நிறுவினார். தன்னார்வலர்கள் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, கலாசார விழிப்புணர்வு, ஒழுக்கம், சேவை, சமூக பொறுப்புணர்வு உள்ளிட்ட பண்புகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது.ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்., பிரசாரகராக இருந்து, அதன் ஹிந்துத்துவ சித்தாந்தத்துடன் துவங்கப்பட்ட பா.ஜ.,வுக்கு மாறியவர் தான், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி.
சிறப்பு நாணயம்
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் துவங்கி நடைபெற இருக்கின்றன. டில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில், ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நேற்று (அக் 01) நடந்தது. இதில், தலைமை விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, நாட்டிற்கு அளித்த பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
முக்கிய பங்கு
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: ஆர்எஸ்எஸ் அமைப்பு 100 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது தற்செயலான நிகழ்வு அல்ல. ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுக்கால பயணம் முன்னோடியில்லாதது.100 ஆண்டு கால மகத்தான பயணம் தேசத்தின் வளர்ச்சியை கட்டியெழுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆர்எஸ்எஸ் நாட்டுக்கு பல சேவைகளை செய்துள்ளது. ஆர்எஸ்எஸ் என்பது தீமையை எதிர்த்து உண்மையை நிலைநாட்டிய இயக்கம். நானும் ஆர்எஸ்எஸ் அமைப்பை வேராக கொண்டவன் தான்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ்., வலுவாக போரிட்டது. தேசத்தின் மீது அன்பு செலுத்துவதையே ஆர்.எஸ்.எஸ்., பெரிதும் விரும்புகிறது. பொய் வழக்குகளை சுமத்தியபோதும், அந்த இயக்கம் ஒருபோதும் துவண்டு போனதில்லை. ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை தடை செய்வதற்கு முயற்சிகள் நடந்தன. அவற்றை எல்லாம் அதன் தலைவர்கள் பொறுத்துக் கொண்டனர். ஒவ்வொரு ஸ்வயம் சேவகரும் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீது அசைக்க முடியாத ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அந்த நம்பிக்கை தான், 'எமர்ஜென்சி' காலத்திலும், இன்னல்களை எதிர்கொள்ள உத்வேகத்தையும், வலுவையும் அவர்களுக்கு கொடுத்தது.'ஒரே இந்தியா; மகத்தான இந்தியா' என்ற கொள்கை மீது, ஆர்.எஸ்.எஸ்., ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கிறது.
இது, தீமையை எதிர்த்து உண்மையை நிலைநாட்டிய இயக்கம். நானும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை வேராக கொண்டவன் தான்.வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் தேசத்தின் ஆன்மா. ஜாதி, மொழி, பிரிவினைவாதம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிட்டால், அவை தேசத்தின் ஆன்மாவை பலவீனமாக்கிவிடும்.
சவால்கள்
இன்றைய காலத்தில் நம் ஒற்றுமை, கலாசாரம் மற்றும் பாதுகாப்பு மீது நேரடியான தாக்குதல் நடத்தப்படுகின்றன. பிரிவினைவாத, பிராந்தியவாத சிந்தனை, ஜாதி, மொழி ரீதியிலான சண்டைகள் மற்றும் பிரிவினைகள் வெளியில் இருக்கும் தீய சக்திகளால் கட்டவிழ்க்கப்படுகின்றன. ஊடுருவல் விவகாரம் நம் தேசத்தின் பாதுகாப்புக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்துலாக உருவெடுத்து இருக்கிறது. விழிப்புணர்வு, அர்ப்பணிப்பு ஆகியவற்றால், அந்த சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும். பொருளாதாரத்திற்காக பிற நாடுகளை சார்ந்திருப்பது, நம் ஒற்றுமையை உடைப்பதற்கான மிகப்பெரிய சதி. அதற்கு நாம் பலியாகிவிடக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
பாரதமாதா உருவம் பொறித்த சிறப்பு நாணயம்!
இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, தேசத்தின் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு, ஊடுருவல் பிரச்னை மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற சித்தாந்தத்தில் தான் தேசத்தின் ஆன்மா புதைந்து இருக்கிறது. இந்த சித்தாந்தம் உடைக்கப்பட்டால் தேசம் பலவீனமாகி விடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும் இந்த விழாவில், சிறப்பு நாணயம் மற்றும் அஞ்சல்தலையை பிரதமர் வெளியிட்டார்.
ரூ.100 மதிப்பு கொண்ட நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேசிய சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில்,சிம்ம வாகனத்தில் வரத முத்திரையுடன் பாரத மாதா இருக்கும் படமும், அவரை ஆர்எஸ்எஸ் சேவகர்கள் மரியாதையுடன் வணங்குவது போன்ற உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா என்ற வாசகம் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும்,' அனைத்தும் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கே அனைத்தும் சொந்தம். என்னுடைய எதுவும் இல்லை' என பொருள்படும் ' Rashtriya Swaha, Idam Rashtraya, Idam Na Mama' என்ற வாசகமும் பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பு துவங்கப்பட்ட 1925 மற்றும் தற்போதைய 2025ம் ஆண்டும் பொறிக்கப்பட்டுள்ளது.மேலும், சிறப்பு நாணயத்துடன் வெளியிடப்பட்ட அஞ்சல் தலையிலும், '1963ம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது நடந்த அணிவகுப்பில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பங்கேற்ற புகைப்படம்' இடம்பெற்றுள்ளது.