1,000 கடைகளுக்கு 'சீல்' ரூ.78 லட்சம் அபராதம் வசூல்
1,000 கடைகளுக்கு 'சீல்' ரூ.78 லட்சம் அபராதம் வசூல்
ADDED : ஜூலை 17, 2025 10:06 PM
புதுடில்லி:டில்லியில், கடந்த மூன்று மாதங்களில், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வந்த, 1,000 கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டதுடன், 78 லட்சம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.
டில்லி மாநகராட்சிக்கு உட்பட்ட, 12 மண்டலங்களிலும், மாநகராட்சியின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த மூன்று மாதங்களாக அதிரடி சோதனை நடத்தினர். சாலையோரங்களில் செயல்படும் தள்ளுவண்டி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்டவற்றில் இந்த சோதனை நடந்தது.
இதில், உணவு பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை பின்பற்றாமலும், உரிய அனுமதி பெறாமலும் செயல்பட்டு வந்த, 1,000 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 78 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், 3,100 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு, விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்கப்படுவது தொடர்பாக அதிக அளவில் புகார்கள் வந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.