1,000 ஆண்டுகள் பழமையான நந்தவாரா ஸ்ரீ விநாயகா சங்கர நாராயண துர்காம்பா கோவில்
1,000 ஆண்டுகள் பழமையான நந்தவாரா ஸ்ரீ விநாயகா சங்கர நாராயண துர்காம்பா கோவில்
ADDED : ஜன 14, 2025 06:37 AM

தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வாலின் நேத்ராவதி ஆற்றின் கரையில் 1,000 ஆண்டுகள் பழமையான நந்தவாரா ஸ்ரீ விநாயகா சங்கர நாராயண துர்காம்பா கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், அதன் கட்டடக் கலை மற்றும் இயற்கை காட்சிகள் மட்டுமின்றி, சக்தி கொண்டதாக அமைந்துள்ளது.
புராணங்கள்படி, பல நுாற்றாண்டுகளாக, இப்பகுதியை நந்தா வம்சத்தின் ஆண்டனர். இவர்களின் தலைநகராக நந்தவாரா இருந்தது.
கோட்டை
நேத்ராவதி ஆற்றின் கரையில் தங்கள் ராஜ்யத்தை, நந்தா மன்னர்கள் நிறுவினர். மேலும், ஒரு கோட்டையையும், அரண்மனையையும் கட்டினர். அதுவே 'நந்தாபுரா' என்று அழைக்கப்பட்டது. கால மாற்றத்தால், 'நந்தாபுரா' என்பது 'நந்தவாரா' என்று திரிந்தது.
நந்தவாராவில் ஒரு காலத்தில் பல அரண்மனைகள், கோவில்கள் இருந்தன. இன்று நந்தவாரா தவிர, மன்னர்களால் கட்டப்பட்ட அரண்மனைகள், கோவில்கள் இல்லை. நந்தவாரா கோவில் மிகவும் பழமையான, புகழ் பெற்ற இடமாகும்.
இதன் மேற்கு பகுதியில், 35 கி.மீ., சுற்றளவில், சஜிபா, அர்குலா, கானந்துார், பஜ்பே, மஞ்சேஸ்வரா, யெர்மல் என பல அரச குடும்பத்தின் வம்சத்தினர் இன்னமும் வசிக்கின்றனர். அவர்களின் ராஜவம்சம் அழிந்ததற்கு, அவர்கள் மீது இருந்த சாபமும் ஒரு காரணம் என்று கருதுகின்றனர்.
நந்தவாரா மன்னர்கள், தங்கள் உடைமைகளை ஏழைகளுக்கு நன்கொடையாக வழங்கினர். இது உள்ளூரை சேர்ந்த சிலருக்கு பிடிக்கவில்லை. மன்னர்களுக்கு எதிரான தந்திரங்களை பயன்படுத்தியதால், போர்ச்சுகீசியர்கள், அவர்களை தொடர்ந்து ஆங்கிலேயர்கள், நந்தவாராவை கைப்பற்றினர்.
சமுதாய கோபுரம்
சீரமைக்கப்பட்ட இக்கோவிலில் புதிதாக 'நந்த தீபம்' அரங்கம், உணவு அருந்தும் 'போஜன சாலை', சமுதாய கோபுரம் கட்டப்பட்டு உள்ளது.
கோவிலில், விநாயகர், சங்கர நாராயணா, துர்காம்பா அருள்பாலிக்கின்றனர். கோவிலில் ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. கொடி மரமும் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மேம்பாட்டு பணிகள் நடக்கவுள்ளன.
மேலும் விபரங்களுக்கு 08255 280091, 280891 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
- நமது நிருபர் -