ADDED : நவ 20, 2024 12:12 AM
கொப்பால்; கொப்பால் மாவட்டத்தில் 10,000 பி.பி.எல்., கார்டுகளை கர்நாடக அரசு ரத்து செய்து உள்ளது.
தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட உள்ளதாக, அரசு அறிவித்து இருந்தது. அதன்படி பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் வைத்திருக்கும், தகுதியற்ற நபர்களின் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
கொப்பால் மாவட்டத்தில் 445 ரேஷன் கடைகள் உள்ளன. 2,25,622 பி.பி.எல்., எனும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கார்டுகள், 36,981 ஏ.பி.எல்., எனும் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள கார்டுகள் உள்ளன.
மாதம் தோறும் 60,000 டன் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
தற்போது, தகுதியற்றவர்களின் பி.பி.எல்., கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
அரசு ஊழியர்கள், வருமான வரி, குடும்ப வரி, தொழில் வரி, கிராமத்தில் 7.4 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்போர், நகர்புறத்தில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடுகள் வைத்திருப்போர், நான்கு சக்கர வாகனம், டிராக்டர் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் 1.20 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளோர் பி.பி.எல்., கார்டுக்கு வைத்திருக்க தகுதியற்றவர்களாக அரசு தெரிவித்து உள்ளது.
இதன் அடிப்படையில் கொப்பாலில் 10,062 பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. பி.பி.எல்., கார்டுகளை ரத்து செய்வதால், மாணவர் உதவித்தொகை, முதல்வர் நிவாரண நிதி போன்ற பல சலுகைகளை இழக்க நேரிடும். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கடும் அதிருப்தியில் உள்ளன.
மத்திய அமைச்சர் குமாரசாமி, ரேஷன் கார்டுகளை ரத்து செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
அரசு தரப்பில், 'தகுதியற்றோரின் ரேஷன் கார்டுகள் மட்டும் தான் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், ரத்து செய்யபட்ட பி.பி.எல்., பயனாளிகள், ஏ.பி.எல்., பயனாளிகளாக மாற்றப்படுவர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.