ADDED : அக் 19, 2024 11:15 PM

சிந்தாமணியில் கிராமம் ஒன்றில், 10,000 ஆண்டுகள் பழமையான கல்வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அப்பகுதியினர், பாண்டவர்களின் வீடுகள் என, நம்புகின்றனர்.
கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்கள், பண்டைய காலத்தினர் வாழ்விடமாக இருந்தன. இதை உறுதிப்படுத்தும் விதமாக, பல அடையாளங்களும் கிடைத்துள்ளன. அதே போன்று சிந்தாமணியில், புராதன கல்வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிக்கபல்லாபூர், சிந்தாமணியின் முருகமல்லா பேரூராட்சிக்கு உட்பட்ட தாமலபல்லகுட்டா, யர்ரகோட்டே கிராமங்களில் பெரிய பாறை அளவிலான கல்வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சிந்தாமணியின் பல்வேறு பகுதிகளின் புராதன இடங்கள், கல்வெட்டுகளை மாநில தொல்லியல் துறை, சமீப நாட்களாக ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில், 2,000 கல்வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த வீடுகள் 3,000 முதல் 10,000 ஆண்டுகள் வரலாறு கொண்டவையாகும். கொள்ளையர்கள் புதையல் ஆசையால், கல்வீடுகளை தோண்டி நாசப்படுத்தி உள்ளனர்.
ஆய்வில் பங்கேற்றுள்ள வரலாற்று வல்லுனர் பவன் மவுர்யா சக்ரவர்த்தி கூறியதாவது:
சிக்கபல்லாபூர் மற்றும் கோலார் மாவட்டங்களின், பல்வேறு இடங்களில் புராதன அடையாள சின்னங்கள் தென்பட்டுள்ளன.
சிந்தாமணியின் அனைத்து கிராமங்களிலும், ஆராய்ச்சி நடந்துள்ளது. தாமலபல்லகுட்டா, யர்ரகோட்டே கிராமங்களில் கல்வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றை பாண்டவர்களின் வீடுகள் என, உள்ளுர் மக்கள் அழைக்கின்றனர். 3,000 முதல் 10,000 ஆண்டு வரலாறு கொண்ட கல்வீடுகள், அன்றைய காலத்து சமாதிகளாக இருக்கலாம்.
இவற்றை மேலும் ஆழமாக ஆராய்ச்சி செய்து வருகிறோம். தமிழகத்தின் நீலகிரி மலை வரை, இத்தகைய கல்வீடுகளை காணலாம்.
'குரூப் டிரைப்ஸ்' என்ற இனத்தை சேர்ந்த ஆதிவாசிகள், இது போன்று சமாதிகள் செய்து வந்தனர். நீலகிரி வனங்களில் வசிக்கும் இந்த சமுதாயத்தினர், இன்றைக்கும் இப்படித்தான் சமாதி கட்டுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.