105 கிலோ ஹெராயின் சிக்கியது: பஞ்சாபில் போலீசார் அதிரடி
105 கிலோ ஹெராயின் சிக்கியது: பஞ்சாபில் போலீசார் அதிரடி
ADDED : அக் 28, 2024 12:50 AM

சண்டிகர்: பாகிஸ்தானில் இருந்து நம் நாட்டு எல்லைக்குள் போதைப்பொருள் கடத்தி வந்த இருவரை, பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 105 கிலோ எடையிலான ஹெராயின் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து, நம் நாட்டின் எல்லைக்குள் நீர்வழித்தடம் வாயிலாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக பஞ்சாப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
அப்போது பாகிஸ்தானில் இருந்து நம் நாட்டின் பஞ்சாப் எல்லை வழியாக நீர்வழித்தடத்தில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களின் உடைமைகளை சோதனையிட்டபோது இரண்டு பெரிய ரப்பர் டயர்களில், 105 கிலோ எடையிலான ஹெராயின் போதைப்பொருள், வெளிநாட்டு துப்பாக்கிகள், நாட்டுத் துப்பாக்கி ஒன்று உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து, போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான நவ்ஜோத் சிங், லவ்பிரீத் குமார் ஆகிய இருவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நவ் புல்லார் குழுவினருடன் தொடர்புடையோர் என்பது தெரியவந்துள்ளது.
இவர்களுடன், வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என, பஞ்சாப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.