மும்பையில் 24 மணி நேரத்தில் கொட்டிய 106 மி.மீ., மழை
மும்பையில் 24 மணி நேரத்தில் கொட்டிய 106 மி.மீ., மழை
ADDED : மே 28, 2025 03:42 AM

மும்பை : மஹாராஷ்டிராவின் மும்பையில், நேற்று முன்தினம் காலை 8:00 மணி முதல் நேற்று காலை 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், 106 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை, 16 ஆண்டுகளுக்கு பின், இந்த முறை ஒரு வாரத்துக்கு முன்பாகவே துவங்கியது போல், மஹாராஷ்டிராவிலும், 35 ஆண்டுகளுக்கு பின், பருவமழை முன்கூட்டியே துவங்கி உள்ளது.
மும்பையில், கடந்த 25ம் தேதி நள்ளிரவு துவங்கி, 26ம் தேதி காலை வரை விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால், அந்நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகின.
பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து முடங்கியதோடு, புறநகர் ரயில் மற்றும் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. 107 ஆண்டுகளுக்கு பின், நடப்பு ஆண்டின் மே மாதத்தில் தான், மஹாராஷ்டிராவில் அதிகபட்ச மழை பொழிவு பதிவாகி உள்ளது.
மும்பை மாநகராட்சி வெளியிட்ட தகவலின்படி, நரிமன் பாயின்ட் பகுதியில், கடந்த 25ம் தேதி இரவு 10:00 மணி முதல் 26 காலை 11:00 வரையிலான நேரத்தில் மட்டும், 250 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
அதே போல், மும்பையில் நேற்று முன்தினம் காலை 8:00 மணி முதல் நேற்று காலை 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், 106 மி.மீ., மழை பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நேற்று காலை 9:00 மணிக்கு பின், படிப்படியாக மழை குறைந்ததால், மும்பையில் ரயில், விமான சேவை மீண்டும் துவங்கியது. ஒருசில இடங்களில், ரயில்கள் குறைவான வேகத்தில் இயக்கப்பட்டன.
மழை குறைந்ததால், இயல்பு வாழ்க்கையும் மெல்ல திரும்பியது. இதற்கிடையே, அடுத்த சில நாட்களுக்கு மும்பையில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.