ADDED : ஏப் 18, 2026 11:41 PM
புதுடில்லி: வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 108 சிலிண்டர்கள் மற்றும் இரண்டு வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தென்கிழக்கு டில்லி ஷாஹீன் பாக் பகுதியில், வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
குற்றப்பிரிவு தனிப்படையினர் பூட்டா சாலையில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 108 வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பாக, ஹரியானா மாநிலம் பரிதாபாதை சேர்ந்த குல்தீப், 35, ஆஷிஷ், 22, மற்றும் விஜய், 28, ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். காஸ் சிலிண்டர்கள் மற்றும் இரண்டு வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை மானிய விலையில் வாங்கி, மற்ற சிலிண்டர்களுக்கு எரிவாயுவை மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்ததை மூவரும் ஒப்புக் கொண்டனர். மூவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.
