ADDED : நவ 21, 2025 01:00 AM
புதுடில்லி:டில்லியில் உள்ள செயின்ட் கொலம்பியா பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்த மாணவர் , ராஜேந்திரா பிளேஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் பகல், 2:30 மணிக்கு, பிளாட்பாரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரின் உடல், பி.எல்.கே., சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. எனினும், அங்கிருந்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
பெயர் குறிப்பிடப்படாத அந்த மாணவரின் உறவினர்கள் கூறியதாவது:
நடிகர் ஷாருக் கான் போல பெரிய நடிகராக வேண்டும் என விரும்பிய அந்த மாணவரை, ஆசிரியர்கள் தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர். ஓவர் ஆக்டிங் செய்கிறான் என கூறி, அவனுக்கு எவ்வித அங்கீகாரமும் அவர்கள் கொடுக்கவில்லை. இந்த தொல்லை, அவன் எட்டாம் வகுப்பு படித்த போதே தொடங்கி விட்டது.
ஒரு கட்டத்தில் ஆசிரியர்களின் தொந்தரவை தாங்க முடியாமல், தற்கொலை தவிர்ப்பு குழுவிடம் அவன் பேசும் போது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளான் .
இந்த தகவலை அப்போதே ஆசிரியர்கள் எங்களிடம் கூறியிருந்தால், அவனை தடுத்திருப்போம். ஆனால், மறைத்து விட்டனர்.
இப்போது உடன் படித்த மாணவர்கள் கூறியதை அடுத்து, இந்த தகவல் எங்களுக்கு தெரிய வந்தது. அவனை அங்கீகரிக்காத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

