ADDED : ஜன 28, 2025 02:12 AM

மைசூரு,
மைசூரு அருகே, 10ம் வகுப்பு மாணவி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கர்நாடகாவில் பள்ளி குழந்தைகள் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன.
சாம்ராஜ் நகர் மாவட்டம், பாடனகுப்பே கிராமத்தைச் சேர்ந்த, மூன்றாம் வகுப்பு படித்த சிறுமி தேஜஸ்வினி, 8; கடந்த 6ம் தேதி பள்ளியில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா, தரகனுார் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் மகந்தேஷ், 13; குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதால், கடந்த 25ம் தேதி உயிரிழந்தார்.
மைசூரு, பிரியாபட்டணாவின் கெல்லுாரு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜு - வசந்தா தம்பதியின் மகள் தீபிகா, 15, ராவந்துாரு கர்நாடக பப்ளிக் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படித்து வந்தார். குடியரசு தினமான நேற்று முன்தினம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், வீட்டுக்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், கதறி அழுதனர்; இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.