ADDED : ஜன 09, 2025 06:38 AM

பெங்களூரு: ராம்நகர் கனகபுராவின் தொட்டசந்தேனஹள்ளியைச் சேர்ந்தவர் அபிஷேக் கவுடா, 25. இவருக்கு, திருமணமாகி குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக, கணவன் - மனைவி பிரிந்து வாழ்கின்றனர்.
பெங்களூரு ஜே.பி., நகரில் சாரக்கியில் தங்கி உள்ள இவர், தான் வசிக்கும் வீட்டிலேயே, டியூஷன் எடுக்கிறார்.
இவரிடம், 10ம் வகுப்பு படித்து வந்த மாணவியை காதலித்துள்ளார். அம்மாணவியும் இவரை காதலித்துள்ளார். கடந்த நவம்பர் 23ம் தேதி டியூஷன் சென்ற மாணவி, வீடு திரும்பவில்லை. அபிஷேக் வீடு பூட்டியிருந்தது.
இது தொடர்பாக ஜே.பி., நகர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், அபிஷேக் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
அங்கு அபிஷேக்கின் மொபைல் போன் இருந்தது. மொபைல் போன் மூலம் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்துவிடுவர் என்பதால், வேண்டுமென்றே மொபைல் போனை அங்கேயே விட்டுச் சென்றுள்ளார். மாணவியிடமும் மொபைல் போன் இல்லை.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, மாணவியை, அபிஷேக் அழைத்துச் சென்றது உறுதியானது.
டியூஷனில் படித்த மற்ற மாணவ - மாணவியரிடம் விசாரித்தபோது, அம்மாணவியும், அபிஷேக்கும் ஓராண்டாக காதலித்து வந்தது தெரிந்தது. மாணவியுடன் செல்லும்போது, தன் வங்கிக் கணக்கில் இருந்த 70,000 ரூபாயையும் அபிஷேக் எடுத்துச் சென்றுள்ளார்.
இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரை பிடிக்க அனைத்து போலீஸ் நிலையத்துக்கும், 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இவரை கண்டுபிடித்து தருவோருக்கு, 25,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்திருந்தனர்.
இதை பார்த்த மாண்டியா மாவட்டம், மலவள்ளியை சேர்ந்த ஒருவர், பெங்களூரு ஜே.பி., நகர் போலீசாருக்கு போன் செய்தார். அதில், தங்கள் வீட்டில் அபிஷேக் இருப்பதாக தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். குறிப்பிட்ட வீட்டில் இருப்பதை உறுதி செய்த போலீசார், அபிஷேகை கைது செய்தனர். அவருடன் இருந்த மாணவியையும் பெங்களூரு அழைத்து வந்தனர். அபிஷேக் மீது 'போக்சோ' வழக்குப் பதிவு செய்தனர்.
தகவல் அளித்த நபருக்கு, பரிசு தொகை வழங்குவதாக கூறியும் அவர் மறுத்துவிட்டார்.