தீ விபத்தில் சிக்கிய பார்வையற்ற மாணவர்கள்; காப்பாற்றிய போலீஸ்காரருக்கு குவிகிறது பாராட்டு
தீ விபத்தில் சிக்கிய பார்வையற்ற மாணவர்கள்; காப்பாற்றிய போலீஸ்காரருக்கு குவிகிறது பாராட்டு
ADDED : மே 27, 2026 06:21 PM

புதுடில்லி: மூச்சுத்திணற வைக்கும் கரும்புகை மண்டலம், தீப்பிழம்பு ஆகியவற்றுக்கும் மத்தியில், நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த வீட்டுக்குள் சிக்கித் தவித்த, 11 பார்வையற்ற மாணவர்கள் உட்பட, 13 பேரை மீட்ட தலைமை போலீஸ்காரரை, உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
டில்லி, புராரி தரேகா சந்தையில் சில நாட்களுக்கு முன் ஒரு கடையில் நள்ளிரவு பற்றிய தீ, மற்ற கடைகளுக்கும் மளமளவென பரவியது. அந்தப் பகுதி முழுதும் கரும்புகை சூழ்ந்தது. கடைகளின் மேல் தளத்தில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது.
ரோந்து பணியில் இருந்த புராரி ஸ்டேஷன் தலைமை போலீஸ்காரர் அமர் சிங், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மேல் தளத்தில் கரும்புகை மண்டலம் சூழ்ந்திருந்தது. இதனால், அங்கு இருந்தவர்கள் தப்பிக்க வழியின்றி தவித்தனர். இரண்டாவது மாடியில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சிக்கியிருப்பதை அமர்சிங் பார்த்தார்.
தீயணைப்புப் படை வரும்வரை காத்திருக்காமல், அந்த வழியாக சென்ற ஒரு லாரியை நிறுத்திய அமர்சிங் அதன் மீது ஏறி, பால்கனி வழியாக இரண்டாவது மாடியை அடைந்தார்.
அங்கு ஒரு வீட்டில் தங்கியிருந்த பார்வையற்ற, 11 சிறுவர்கள் மற்றும் தம்பதி ஆகிய 13 பேரையும் தன் தோள்களில் சுமந்து பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றார்.
தீயணைப்பு படை வருவதற்கு முன்பே, 13 உயிர்களை காப்பாற்றிய தலைமை போலீஸ்காரர் அமர்சிங்கை, போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
